

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. சுமார் 71 கோடி பேர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். சுமார் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வகையை சேர்ந்த பிஏ 3.2 என்ற கரோனா வைரஸ் பரவி வருகிறது. இது சிக்காடா என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் முதல்முறையாக தென்னாப்பிரிக்காவில் பிஏ 3.2 கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்த 2025-ம் ஆண்டில் இந்த வைரஸ் ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளில் மிதமாக பரவுவது கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்காவின் 25 மாகாணங்களில் பிஏ 3.2 கரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) கூறியதாவது: கடந்த ஆண்டு இறுதியில் நெதர்லாந்தில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்துக்கு வந்த சுற்றுலா பயணிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் பிஏ 3.2 கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதன்பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பிஏ 3.2 கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ், புளோரிடா, கலிபோர்னியா உள்ளிட்ட 25 மாகாணங்களில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
பிஏ 3.2 கரோனா வைரஸ் 75 மரபணு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. எனினும் முந்தைய கரோனா வைரஸ்களைவிட புதிய பிஏ 3.2 கரோனா வைரஸின் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இந்த வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு சிடிசி அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘பிஏ 3.2 கரோனா வைரஸ் பரவலை கண்காணித்து வருகிறோம். இந்த வைரஸால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்பு ஏற்படவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது. இப்போதைக்கு புதிய கரோனா வைரஸால் மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை’’ என்று தெரிவித்தன.