

மத்திய அரசு அறிமுகம் செய்த திருநர் சட்ட மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மக்களாவையில் வழக்கம்போலவே எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையிலும் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இப்போது எதிர்ப்புக் குரல் மாற்றுப் பாலினத்தவர் சமூகத்திலிருந்தும், சமூக ஆர்வலர்களிடமிருந்தும், அரசியல் கட்சித் தலைவர்களிடமும் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
“யாருடைய உரிமைகளை, வாழ்வைப் பாதிக்கிறதோ, அவர்களது கருத்துகளையே கேட்காமல் திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தங்களைத் திணிக்கக் கூடாது. திருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் என இயற்றப்பட்டுள்ள சட்டத்தை திருநர் சமுதாயத்தினரே எதிர்க்கிறார்கள் என்றால், அது ஏன் என்று ஆராய வேண்டுமே ஒழிய, அதனைத் திணிக்கக் கூடாது.
ஒன்றிய பாஜக அரசு இம்முயற்சியை நிறுத்தி, திருநர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் திருநர்களின் உண்மையான இசைவைப் பெற முயல வேண்டும்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதுபோல் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் அரசியல் தலைவர்களும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் கண்டனக் குரல்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
மூன்றாம் பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026, முந்தைய 2019 சட்டத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்று சுருக்கமாகப் பார்ப்போம்.
மாற்றங்கள் என்னென்ன?
* இந்த மசோதா பாலினம் சார்ந்த சுய அடையாள முறையை மறுக்கிறது. அதாவது 2019 சட்டத்தில் இருந்த பாலினம் சார்ந்த ‘self-perceived gender identity’ முறையை நீக்குகிறது.
* பாலினத்தை உறுதி செய்ய மருத்துவக் குழு சான்றிதழ் அவசியம் என மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் தனது பாலின அடையாளங்களை தேர்வு செய்வதென்பது இயற்கைக்கு அப்பாற்பட்டு, அவர்களின் பாலின மாற்றம் குறித்து மருத்துவர்களிடம் சோதித்து சான்றாக பெற வேண்டும் என வலியுறுத்துகிறது. அதுவும் சட்டம் என்ன அம்சங்களை சுட்டிக் காட்டுகிறதோ, அவற்றில் பொருந்தினால் மட்டுமே அவருக்கு திருநர் சன்று வழங்கப்படும். அதன் பிறகே மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்துதான் திருநர் அடையாள உரிமை பெற வேண்டும் எனக் கூறுகிறது இச்சட்டம்.
திருநர் என்ற சொல்லுக்கான விளக்கத்தையும் புதிய மசோதா மாற்றியிருக்கிறது. கின்னர், ஹிஜ்ரா, அரவாணி, ஜோக்டா போன்ற வழக்கொழிந்த சொற்களைப் பரிந்துரைக்கிறது.
அதுமட்டுமல்லாது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்கும் பிரிவு இந்த மசோதாவில் மறுத்துள்ளதாகவும் திருநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எதிர்ப்பு வலுப்பது ஏன்?
சுய அடையாளம் நிர்ணயித்தலை மருத்துவக் குழு வசம் கொடுத்ததை மாற்று பாலினத்தவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இது தங்களின் தனி உரிமைக்கும், கண்ணியத்துக்கும் எதிரானது என்கின்றனர்.
இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்தால், தங்களைப் போன்றோரின் பாலின அடையாளத்தைச் சுற்றிய கண்காணிப்பை ஏற்படுத்தி, அதுவே அத்தகையோர் சட்ட அங்கீகாரத்தை நாடுவதைத் தவிர்த்துவிடும் என்கின்றனர்.
அரசியல் தலைவர்களும் இந்தச் சட்டத்தை வலுவாக எதிர்க்கின்றனர். பல விஷயங்களில் மத்திய அரசை தாராளமாகப் பாராட்டும் சசி தரூர் கூட இந்தச் சட்டம் திருநர்களின் உரிமையை நிலைநாட்டுவதில் ஒரு தீவிரமான பின்னடைவை உண்டாக்கும் என்று கூறியுள்ளார்.
உடனடி எதிர்வினையும், உதவிக் கரமும்:
இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய மாத்திரத்தில், National Council for Transgender Persons (NCTP) எனப்படும் மாற்றுப் பாலினத்தவருக்கான தேசிய கவுன்சிலின் உறுப்பினரும், தென் பிராந்தியப் பிரதிநிதியுமான கல்கி சுப்ரமணியம் தனது ராஜினாமா கடிதத்தை மத்திய அமைச்சருக்கு அனுப்பினார். அதில் அவர், “மாற்றுப் பாலினத்தவரின் வாழ்தலுக்கான முக்கியத்துவத்தையே சிதைக்கக் கூடிய விவகாரத்தில், கூட்டுக் குரல் நசுக்கப்பட்ட ஓரிடத்தில் உள்ள மேஜையை இனியும் அலங்கரிக்க முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.
அவரைப் போலவே, கவுன்சிலின் வடகிழக்குப் பிராந்தியத்துக்கான திருநர் சமூகப் பிரதிநிதி ரிதுபர்ணா நியோக்-கும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கல்கி சுப்ரமணியம் (இடது), ரிதுபர்ணா நியோக் (வலது)
இவ்வாறாக சம்பந்தப்பட்ட சமூகம், பொதுச் சமூகம், அரசியல் தலைவர்கள் எனப் பல பக்கமும் இருந்து எதிர்ப்புக் குரல் பதிவாகிக் கொண்டே இருக்கிறது.
இந்தச் சட்டம், திருநர் சமூகத்தைப் பொறுத்தவரையில் வெறும் கொள்கை மாற்றமல்ல, பல ஆண்டுகளாக போராடிப் போராடி சட்ட ரீதியாக தங்களுக்கான மாண்பை உறுதிப் படுத்திய உழைப்பை அழிப்பதாக உள்ளது. தங்கள் பாலினத்தின் மீது இருந்த தங்களது உரிமையைப் பறிப்பதென்பது, கடந்த 10 ஆண்டு காலமாக கட்டியெழுப்பிய தங்கள் உரிமைகள் மீதான தேசத்தின் பார்வையை தவிடுபொடியாக்குவதாகும் என்று திருநர் சமூகத்தினர் கருதுகின்றனர்.
இந்நிலையில், திருநர் சமூகத்தின் நலன் சார்ந்து இயங்கும் பல்வேறு அமைப்புகளும், கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் உள்ள மாற்றுப் பாலினத்தவருக்கு ஆலோசனைகள் வழங்க ஹெல்ப்லைன்களை உருவாக்கி உள்ளன. இன்னும் சில மையங்கள், பாலினம் சார்ந்து திடீரென எழுந்துள்ள இந்த நிச்சயமற்ற சூழலால் உருவாகியுள்ள மன அழுத்தத்துக்கு நிவாரணம் நல்க, மனநல ஆலோசனை சேவைகளையும் வழங்க ஏற்பாடு செய்து வருவது கவனிக்கத்தக்கது.