

புதுடெல்லி: கடந்த ஆண்டு இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்குக் களத்தில் தொழில்நுட்ப உதவி வழங்கியதை சீனா முதல்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, மே மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. பின்னர் போர் வாபஸ் பெறப்பட்டது. இந்த குறுகிய கால போரில் பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்ததாக இந்தியா கூறிய புகார்களைச் சீனா இதுவரை மறுத்து வந்தது.
இந்நிலையில், சீனாவின் அரசு ஊடகமான சிசிடிவி, ஏவியேஷன் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் ஆஃப் சீனா (ஏபிஐசி) பொறியாளர் ஷாங் ஹெங் என்பவரின் பேட்டியை ஒளிபரப்பியது. அதில், ஆபரேஷன் சிந்தூர் மோதலின் போது பாகிஸ்தான் விமானப் படை தளங்களில் தங்கியிருந்து ஜே-10சிஇ போர் விமானங்களுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கியதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்திய ராணுவத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர்.சிங் ஏற்கெனவே குற்றம் சாட்டியபடி, சீனா தனது செயற்கைக்கோள் தரவுகளைப் பாகிஸ்தானுக்கு உடனுக்குடன் வழங்கி, இந்தியாவைத் தாக்கப் பாகிஸ்தானை ஒரு இரவல் கத்தியாக பயன்படுத்தியுள்ளது இப்போது நிரூபணமாகியுள்ளது.
இந்தியத் தரப்பில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மற்றும் ராணுவத் தளங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சீனா தனது போர் விமானங்களின் திறனை உயர்த்திப் பிடிப்பதன் மூலம், தனது ஜே-35 ஸ்டெல்த் ரக விமானங்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்வதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சீனாவின் இந்த வெளிப்படையான ஒப்புதலைத் தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சீனாவுடனான வர்த்தகக் கொள்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.