பாகிஸ்தானின் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

குவெட்டா: பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (மே 24) ராணுவ வீரர்கள் பயணித்த ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குவெட்டா நகரில் உள்ள சமன் பதக் ரயில் நிலையம் அருகில் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பினால் ரயில், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், இதன் தாக்கத்தால் அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல் மற்றும் கண்ணாடிகள் சேதமானதாக தகவல் கிடைத்துள்ளது. இதை பாகிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ராணுவத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல் என அந்த தீவிரவாத அமைப்பு இதை கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த வீடுகளும் சேதம் அடைந்துள்ளதாக சம்பவ இடத்தில் பணியில் உள்ள காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் பல்வேறு துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விசாரணை முடிந்த பிறகு உறுதி செய்யப்பட்ட தகவல்கள் பகிரப்படும் என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாபர் யூசுப்சாய் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதில் பெஷாவருக்கு புறப்பட்ட ரயில்தான் சேதமடைந்துள்ளது. அந்த ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பற்றியதாக தகவல் கிடைத்துள்ளது.

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு
வீழ்ச்சியின் பாதையில் பும்ராவின் பவுலிங்! - என்னதான் காரணம்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in