

பும்ராவுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான சீசனாக அமைந்துள்ளது நடப்பு சீசன். அவர் 13 போட்டிகளில் வெறும் 4 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளார். சராசரி அதிர்ச்சியூட்டும் வகையில் 102.50 என்கின்றன புள்ளிவிவரங்கள். அதாவது 102 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ரேட்டில் விக்கெட் எடுத்துள்ளார் பும்ரா.
அனைத்து கால சிறந்த பவுலர் என்று வர்ணிக்கப்படும் பும்ரா, டி20 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளைச் சாய்த்த அந்த பும்ராவா இப்போது மும்பை இந்தியன்ஸுக்கு இப்படி வீசுகிறார் என்று ஆச்சரியப்பட வைக்கிறது.
உலகக் கோப்பை என்பதே உடல்/மன அழுத்தத் தொடர். அது முடிந்தவுடன் முதலாளிகளின் கிரிக்கெட்டான ஐபிஎல் தொடர் அதை விடவும் பணிச்சுமை மிக்கது. இதனால் பும்ரா சோர்வடைந்து விட்டாரா? அவரது பவுலிங் ரன்-அப் சோர்ந்து வருகிறது. கடைசி நேர கைச்சுழற்றலில் ஒரு களைப்பு தெரிந்து வருகிறது.
ஏன் இந்தச் சந்தேகம் எனில் முதலில் சில போட்டிகளில் சிறிய காயத்தினால் முழுவீச்சுடன் பந்து வீசாத பும்ரா, கடந்த சில போட்டிகளில் முழு வேகத்துடன் வீசுகிறார். ஆனால், விக்கெட்டுகள் விழவில்லை. மாறாக ரன்கள் விளாசப்பட்டு வருகின்றன. வேகம் முன்னேறினாலும் பந்து வீச்சின் துல்லியம், கூர்மை, ஊடுருவும் தன்மை ஆகியவை பும்ராவிடம் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளன. இதற்கு முழுக்காரணம் ஐபிஎல் கிரிக்கெட் தான் என்றால் மிகையாகாது.
பண முதலைகளின் நலன்களுக்காக தேசிய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆதார ஸ்ருதியான வீரர்களை வீழ்ச்சியடையச் செய்ய பிசிசிஐ அனுமதிக்கலாமா என்பதே கேள்வி. வருண் சக்ரவர்த்தி நல்ல எழுச்சி பெற்று வரும் நேரத்தில் அவரை காயத்துடனேயே பந்து வீச செய்கிறார்கள். பும்ரா இந்த ஐபிஎல் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் ஆடியுள்ளார். ஏன்? காயம் என்னவாயிற்று, ஓய்வு தேவையில்லையா? ஐபிஎல் பண முதலைகளுக்கு வீரர்கள் என்ன கைப்பாவைகளா? பொம்மைகளா? போன்ற கேள்விகள் இனி தலையெடுக்கும் என்பதில் ஐயமில்லை.
பும்ராவின் மிகப்பெரிய டி20 ஆயுதம் ஸ்லோ பந்துகளும் யார்க்கர்களும். ஆனால் இவையுமே விக்கெட்டுகளைப் பெற்றுத் தரவில்லை என்பதுதான் பும்ரா பந்து வீச்சு வீழ்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. Boom Bboom Bumrah இப்போது Bust Bust Bumrah ஆகி விட்டாரா?
பும்ரா பந்து வீச்சு வீழ்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருப்பதாக நமக்குத் தோன்ற இன்னொரு காரணம் அவர் ரன்-அப் சரியில்லாமல் போனதால் நோ-பால்கள் அதிகம் வீசி வருகிறார். பணிச்சுமை மேலாண்மை என்கிறார்கள். ஆனால் எல்லா போட்டிகளிலும் பும்ரா, மும்பை இந்தியன்ஸ் லெவனில் இருந்து பந்து வீசியுள்ளார். இதுதான் பணிச்சுமை மேலாண்மை லட்சணமா?
ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முதலாளிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இந்திய அணிக்கு ஆடும் டாப் வீரர்கள், முக்கிய வீரர்களின் பணிச்சுமையைக் கண்காணிக்க பிசிசிஐ தனி நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். இல்லையெனில் பும்ரா விரைவில் காணாமல் போய் விடுவார் என்பதில் சந்தேகமில்லை.
தனிப்பட்ட முதலாளிகளின் லாப வேட்டைக்கு வீரர்களைப் பலிகடவாக்கலாமா என்பதை பிசிசிஐ ஆலோசனை செய்து விரைவில் முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் தேசிய கிரிக்கெட் மே.இ.தீவுகள் போல் விரைவில் சரிவை நோக்கிப் பயணிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.