

டாக்கா: வங்க தேசத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து மத குரு சின்மயி கிருஷ்ண தாஸுக்கு, அவரது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக 5 மணி நேரம் மட்டும் பரோல் வழங்கப்பட்டது.
வங்கதேச சம்மிலித சனாதனி ஜாகரன் ஜோத் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான சின்மயி கிருஷ்ண தாஸ், 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சின்மயி கிருஷ்ண தாஸின் தாயார் சந்தியா ராணி தார் (71) உடல்நலக் குறைவால் ஹட்காசாரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தாயின் மறைவுக்குப் பிறகே, சிட்டகாங் மாவட்ட ஆட்சியர் முஹம்மது ஜாஹிதுல் இஸ்லாம் மியா, இறுதிச்சடங்கில் பங்கேற்க 5 மணி நேரம் மட்டும் கிருஷ்ண தாஸுக்குப் பரோல் வழங்கி உத்தரவிட்டதாக ‘தி டெய்லி ஸ்டார்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறையிலிருந்து தற்காலிகமாக வெளியே வந்த சின்மயி கிருஷ்ண தாஸ், சிட்டகாங்கில் உள்ள புண்டரீக் தாம் கோயிலில் உள்ள ராதா-கிருஷ்ணர் விக்கிரகத்தின் பாதங்களைத் தொட்டு அழுது வணங்கும் உணர்ச்சிப்பூர்வமான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.