துப்பாக்கி வேண்டாம்... கீ போர்டு போதும்... வடகொரிய ‘ஹேக்கர் படை’யின் பின்புலம்!

துப்பாக்கி வேண்டாம்... கீ போர்டு போதும்... வடகொரிய ‘ஹேக்கர் படை’யின் பின்புலம்!
Updated on: 
3 min read

வடகொரியா என்றாலே அதிபர் கிம் ஜோங் உன், அடிக்கடி நடத்தப்படும் ஏவுகணைச் சோதனைகள், அணுகுண்டு பரிசோதனைகள் மற்றும் சர்வதேச நாடுகளால் விதிக்கப்படும் கடுமையான பொருளாதாரத் தடைகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், சர்வதேச சமூகத்தின் பார்வையில் படாமல் அதிபர் கிம் தன் கையில் வைத்திருக்கும் மிகவும் ஆபத்தான மற்றும் கோடிக்கான டாலர்களை குவிக்கும் ஆயுதம்தான் அவரின் ‘ஹேக்கிங் படை’ என்பது இப்போது தெரியவந்துள்ளது.

 “ஹேக்கிங் என்பது வெறும் சைபர் குற்றம் அல்ல; அது எங்கள் நாட்டின் அனைத்து நோக்கத்துக்குமான கூர்மையான வாள்” என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இதன் முக்கியத்துவத்தைப் புகழ்ந்துள்ளார்.

நாட்டின் சாமானிய மக்களுக்கு இணைய வசதி முழுமையாக மறுக்கப்பட்ட ஒரு தேசத்தில், அரசாங்கமே ஹேக்கிங் கல்லூரிகளைத் திறந்து உலகத் தரம் வாய்ந்த ஹேக்கர்களை உருவாக்குகிறது. ஏவுகணைகளை விட வடகொரியா தயாரிக்கும் ஹேக்கர்கள்தான் சர்வதேச சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறார்கள்.

துப்பாக்கிகள் இல்லாத டிஜிட்டல் போர்க்களத்தில், அரசே ஹேக்கர்களைப் பயிற்றுவித்து உலக வங்கிகளைக் கொள்ளையடிக்க வைக்கும் சைபர் போர்க்கலையை வளர்க்கிறது. ஆனால், சர்வதேச அமைப்புகள் கூறும் இந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் வடகொரிய அரசு ஏற்க மறுக்கிறது.

பினான்ஸ் சைபர் தாக்குதல்

 அக்டோபர் இறுதியில், உலகின் மிகப் பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான பினான்ஸ் (Binance) அமைப்பின் தகவல்களை ஹேக்கர்கள் ஊடுருவி 60 பில்லியன் டாலர்களை (கிட்டத்தட்ட ரூ.60 ஆயிரம் கோடி) 20 நிமிட இடைவெளியில் கொள்ளையடித்தனர்.

இந்த சைபர் தாக்குதலை யார் நடத்தியது என இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ. (FBI) மற்றும் பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான டி.ஆர்.எம். லேப்ஸ் (TRM Labs) ஆகியவை, இதன் பின்னணியில் வடகொரியாவின் ‘டிரேடர் டிரெய்டர்’ (Trader Traitor) அமைப்பு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளன. இதை செயின் அனாலிசிஸ் மற்றும் எலிப்டிக் பிளாக்செயின் நிறுவனங்களும் உறுதி செய்கின்றன.

அரசு ஆதரவில் ஹேக்கர்கள் உருவாக்கம்

ஹேக்கர்களை உருவாக்க வேண்டும் என்பதை வடகொரியா நேற்று இன்று திட்டமிடவில்லை. 1980-களிலேயே இதற்கான அடித்தளமிட்டு, தொழில்நுட்ப ரீதியாக தன்னை வளர்த்துக்கொண்டது. 1990-களில் கொரியா கம்ப்யூட்டர் மையம் உருவாக்கப்பட்டு, தேசிய அளவில் ஐ.டி. மேம்பாடு மேற்பார்வை செய்யப்பட்டது.

1995-ம் ஆண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல், நேரடியாக ராணுவத்தின் கீழ் தனியாகச் சைபர் படையை உருவாக்கிச் சைபர் திறன்களை வளர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். 1998-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பக் கல்வி மேம்படுத்தப்பட்டு, 4-ம் வகுப்பில் இருந்தே அனைத்து மாணவர்களுக்கும் கணினிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது.

2000-களில் வடகொரியா பெரிய அளவிலான சைபர் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது. தொடக்கத்தில் தென்கொரியா மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின் தனது தாக்குதலைக் கொரிய தீபகற்பம் கடந்து விரிவுபடுத்தியது. இதில் 2017-ம் ஆண்டு நடந்த 'வான்னாகிரை' (WannaCry) தாக்குதல், மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

தேர்வு மற்றும் பயிற்சி முறைகள்

வடகொரியாவின் அரசு சைபர் செயல்பாடுகளுக்காக, பள்ளியில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் சிறந்து விளங்கும் மாணவர்களைத் (11 முதல் 12 வயது) தேர்ந்தெடுக்கிறது. இவர்களுக்குப் பியோங்யாங்கில் உள்ள புகழ்பெற்ற 'கும்சோங்' (Kumsong) இடைநிலைப் பள்ளியில் கணினி தொடர்பான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அதன்பிறகு, இந்த மாணவர்களுக்கு மிரிம் கல்லூரி, மொரன்போங் கல்லூரி, கிம் இல் சுங் பல்கலைக்கழகம் அல்லது கிம் சேக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சைபர் தாக்குதல்கள் குறித்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அங்கு அவர்களுக்கு ராணுவப் பயிற்சிகளுடன் மேம்பட்ட சைபர் திறன் பயிற்சிகளும் இணைந்த பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. 2024-ம் ஆண்டின் நிலவரப்படி, வடகொரியா அரசு சுமார் 8,400 சைபர் நிபுணர்களை உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியா உலகளவில் மிகப்பெரிய சைபர் அச்சுறுத்தலாக மாறியதற்கு முக்கியக் காரணம், அரசாங்கமே பின்னால் நின்று இயக்குவதால் ஹேக்கர்களுக்குச் சட்டப் பிரச்சினைகளோ உள்நாட்டுப் பயமோ இல்லை.

மேலும், ஹேக்கர்கள் நேரடியாக வடகொரியாவில் இருந்து மட்டும் இயங்குவதில்லை. பிற நாடுகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கச் சீனா, ரஷ்யா, மலேசியா மற்றும் கிழக்கு ஐரோப்பியடுகளில் முகாமிட்டுத் தாக்குதல்களை நடத்துகிறார்கள்.

நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இணையம் மறுக்கப்பட்டாலும், இந்த சைபர் அமைப்புகளுக்கு உலகின் அதிநவீன உள்கட்டமைப்புகளும் செயற்கை நுண்ணறிவு (AI) நுட்பங்களும் வழங்கப்படுகின்றன.

முக்கிய சைபர் குழுக்கள்

வடகொரியாவின் முன்னணி சைபர் தாக்குதல் படையான ‘லசாரஸ் குழு’ (Lazarus Group / APT38) மற்றும் அதன் துணைக் குழுக்கள் சர்வதேச அளவில் இயங்குகின்றன. லசாரஸ் குழு என்பது வடகொரிய உளவு அமைப்பான ஆர்.ஜி.பியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு பெரிய சைபர் ராணுவப் படை. இவர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் இலக்குகளுக்கு ஏற்ப, நிதித் திருட்டு, ராணுவ உளவு, உள்கட்டமைப்புச் சேதம் எனத் தனித்தனிப் பிரிவுகள் உள்ளன.

லாசரஸ் அமைப்பின் கீழ் இயங்கும் இரு பிரதானமான மற்றும் ஆபத்தான துணைப் பிரிவுகள் உள்ளன. இவை தவிர ப்ளூநார்ஃப் (BlueNoroff), அன்டாரியல் (Andariel), கிம்சுகி (Kimsuky), பீகில் பாய்ஸ் (BeagleBoyz) ஆகிய அமைப்புகளும் உள்ளன. இதில் ப்ளூநார்ஃப் (BlueNoroff) பிரிவு வெளிநாட்டு வங்கிகள், ஸ்விஃப்ட் நெட்வொர்க் மற்றும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகளை இலக்காக வைத்து நிதித் திருட்டில் ஈடுபடுகிறது.

அன்டாரியல் (Andariel) பிரிவு தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் அரசு அமைப்புகள், பாதுகாப்புத் துறை மற்றும் அணு உலைகளை இலக்காகக் கொண்டு ராணுவ உளவு பார்க்கிறது. இவை தவிர கிம்சுகி, பீகில் பாய்ஸ் போன்ற குழுக்களும் இயங்குகின்றன.

வடகொரியா தனக்கு எதிரிகளாகக் கருதும் நாடுகளில் சமூகக் குழப்பத்தை உருவாக்குவதே ஆரம்பகால நோக்கமாக இருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளில் பணம் சம்பாதிப்பதை நோக்கியே நகர்ந்துள்ளன. ஐ.நா. நிபுணர் குழுவின் கூற்றுப்படி, திருடப்படும் இந்தப் பணமே வடகொரியாவின் பேரழிவு ஆயுதத் திட்டங்களுக்கு 40% நிதியளிக்கிறது.

தடுப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க அரசு லாசரஸ் குழு, பீகில் பாய்ஸ், கிம்சுகி ஆகிய அனைத்து அமைப்புகளையும் தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும் டோர்னடோ கேஷ், சின்பாத், பிளெண்டர். ஐஓ போன்ற தளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. எஃப்.பி.ஐ அமைப்பும் பிளாக்செயினைக் கண்காணித்து வருகிறது.

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து இணைந்து கூட்டு சைபர் கண்காணிப்பு மையங்களை அமைத்துள்ளபோதிலும், சர்வதேச எல்லைகள் மற்றும் இறையாண்மைச் சட்டங்களினால் வடகொரியாவின் தாக்குதல்களை முழுமையாகத் தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

துப்பாக்கி வேண்டாம்... கீ போர்டு போதும்... வடகொரிய ‘ஹேக்கர் படை’யின் பின்புலம்!
சென்னை களப் பணி அனுபவம், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர்... யார் இந்த நித்யா ராமன்?

X