

புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஓர் இந்திய மாலுமி உயிரிழந்தார். 10 இந்திய மாலுமிகள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக ஈரான் தூதரக அதிகாரிகளை நேரில் வரவழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. பல்வேறு நாடுகளின் சமரசத்தால் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இரு நாடுகள் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. கடந்த ஜூன் 17-ம் தேதி இரு தரப்பும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்பிறகு தங்கள் எல்லையை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தி பகுதி வழியாகவே எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல வேண்டும் என்று ஈரான் ராணுவம் கட்டுப்பாடு விதித்தது. இதை மீறி ஓமன் கடல் பகுதி வழியாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதன் காரணமாக அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 8-ம் தேதி பகிரங்கமாக அறிவித்தார். தற்போது அமெரிக்கா, ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான எம்டி அல் பஹியா, எம்டி மொம்பாசா ஆகிய இரு எண்ணெய் கப்பல்கள் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல முயன்றன. இரு கப்பல்களிலும் மாலுமிகள் உட்பட மொத்தம் 46 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 30 பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்த எண்ணெய் கப்பல்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் இரு கப்பல்களும் கடுமையாக சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஓர் இந்திய மாலுமி உயிரிழந்தார். 10 இந்திய மாலுமிகள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்டி அல் பஹியா எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஓர் இந்திய மாலுமி உயிரிழந்தார். மற்றொரு இந்திய மாலுமி படுகாயம் அடைந்தார். எம்டி மொம்பாசா எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 இந்திய மாலுமிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை இந்தியா மிக வன்மையாகக் கண்டிக்கிறது. சர்வதேச சட்ட விதிகளின்படி மேற்கு ஆசியாவில் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மத்திய அரசு சார்பில் இந்தியாவுக்கான ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதன்படி ஈரான் தூதரக துணைத் தலைவர் முகமது ஜாவத் ஹூசைனி மற்றும் தூதரக மூத்த அதிகாரி ஒருவர் டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகினர். அப்போது இந்திய மாலுமி உயிரிழந்தது தொடர்பாக ஈரான் தூதரக அதிகாரிகளிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.
11 கப்பல்கள் கடலில் நிறுத்தம்
மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஈரானில் இருந்து 2,361 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பி உள்ளனர். தற்போதைய போரால் இந்தியாவுக்கு வர வேண்டிய 11 எண்ணெய் கப்பல்கள் பெர்சிய வளைகுடா பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த கப்பல்களில் 148 இந்திய மாலுமிகள், ஊழியர்கள் உள்ளனர். மேற்கு ஆசிய பதற்றத்தை தணிக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். இந்திய மாலுமி உயிரிழந்தது தொடர்பாக ஈரான் தூதரக துணைத் தலைவரிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கூறும்போது, “ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு 20% கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும் வளைகுடா நாடுகளை சேர்ந்த தலைவர்களின் அறிவுரையின் பேரில் 20 சதவீத கட்டண திட்டம் கைவிடப்படுகிறது. அதற்கு பதிலாக வளைகுடா நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடைய ஈரான் ராணுவம் கூறும்போது, “ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டு விட்டது. அமெரிக்காவின் அத்துமீறல்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே இந்த ஜலசந்தி திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வருவதால் உலகம் முழுவதும் மீண்டும் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா தீவிர தாக்குதல்
ஈரானின் புஷேர், பந்தர் அப்பாஸ், மஹ்சஹர், அபாதான் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. மேலும் அமெரிக்க போர் விமானங்களும் குண்டு மழை பொழிந்தன. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் ராணுவம் ஆளில்லாத ட்ரோன் படகுகள் மூலம் போர்க்கப்பல்கள், எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கம்.
இதே பாணியில் ஈரானின் பந்தர் அப்பாஸ் கடற்படைத் தளத்தின் மீது அமெரிக்க கடற்படை நேற்று ட்ரோன் படகு மூலம் தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக குவைத், பஹ்ரைன், ஜோர்டான் நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் ராணுவம் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.