

கோப்புப்படம்
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்த தனது கெடுபிடியை ஈரான் தளர்த்தியுள்ளது. எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தவிர, மற்ற அனைத்து கப்பல்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை திறந்தே இருக்கும் என்று ஐ.நா.வின் ஈரான் பிரதிநிதி தெரிவித்தார்.
முன்னதாக, 48 மணி நேரத்திற்குள் இந்த ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்படாவிட்டால் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கெடு விதித்திருந்தார். அதற்கு உடனடியாக ஈரானும் கடுமையாக எதிர்வினையாற்றியது. ஆனால், சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட ஐ.நா..வின் சர்வதேச கடல்சார் அமைப்பிற்கான ஈரான் பிரதிநிதி அலி மூசாவி, “ஈரானின் எதிரிகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள், எங்களுடனான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஹார்முஸ் நீர்வழிப்பாதையைக் கடந்து செல்லலாம்.
வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், மாலுமிகளைப் பாதுகாக்கவும் ஐ.நா. அமைப்புடன் ஒத்துழைக்க ஈரான் தயாராக உள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களே காரணம். ராஜதந்திரம் ஈரானின் முன்னுரிமையாக உள்ளது. இருப்பினும், ஆக்கிரமிப்பை முழுமையாக நிறுத்துவதும், பரஸ்பர நம்பிக்கையும் அதைவிட முக்கியமானவை” என்று மூசாவி கூறினார்.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை, ஈரான் மூடியது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் கூட்டாளிகளுக்கு ஹார்முஸ் வழியாக ஒரு லிட்டர் எண்ணெய் கூட சென்றடைய அனுமதிக்க மாட்டோம் என்றும் ஈரான் கூறியது.
ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஒரு கடற்படைக் கூட்டணியை உருவாக்க ட்ரம்ப் முயன்று வருகிறார். ஆனால், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பவில்லை என பெரும்பாலான நேட்டோ நட்பு நாடுகள் தெரிவித்துவிட்டன. இதனால் ட்ரம்ப் கடும் அதிருப்தியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.