ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்: ஈரான் எதிர்வினை என்ன?

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்: ஈரான் எதிர்வினை என்ன?
Updated on
2 min read

வாஷிங்டன்: “48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்துவிடாவிட்டால், அந்நாட்டின் மின் நிலையங்களை அழித்தொழிப்போம்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பேசியதன் மறுநாளே ட்ரம்ப் இவ்வாறு பேசியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், ‘இன்னும் 48 மணி நேரத்திற்குள், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, முழுமையாகத் திறந்துவிடாவிட்டால், அமெரிக்கா ஈரானின் பல்வேறு மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தொழிக்கும்; இதில் மிகப்பெரிய மின் நிலையத்தின் மீதே முதலில் தாக்குதல் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான மோதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ட்ரம்பிடம் இருந்து இத்தகைய மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்த ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர், “எங்களின் எரிசக்தி நிலையங்கள் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்பட்டால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும்” என்று எச்சரித்தார்.

ஈரான் பதிலடி: ஈரான் மின் நிலையங்களை அழித்தொழிப்பேன் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், சனிக்கிழமை (மார்ச் 21) இரவு, தெற்கு இஸ்ரேலில் உள்ள இரண்டு குடியிருப்புப் பகுதிகள் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. இஸ்ரேலின் முக்கிய அணு ஆராய்ச்சி மையத்திற்கு அருகில் நடந்த இந்த இரட்டைத் தாக்குதல்களில், கட்டிடங்கள் சிதைந்தன.

நேற்று இரவு இஸ்ரேலின் மக்கள் தொகை குறைவாக உள்ள நெகேவ் பாலைவனத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களான திமோனா மற்றும் அராட் ஆகிய தெற்கு நகரங்களைத் தாக்கிய ஈரான் ஏவுகணைகளை இடைமறிக்க முடியவில்லை என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

இஸ்ரேலின் முக்கிய அணு ஆராய்ச்சி மையத்தை சுற்றியுள்ள இப்பகுதியில், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி ஈரான் ஏவுகணைகள் ஊடுருவியது இதுவே முதல் முறையாகும்.

ஈரான் தாக்குதல் நடத்திய பகுதிக்கு பல அவசரகால மீட்புக் குழுக்கள் அனுப்பப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். திமோனா அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் மேற்கிலும், அராட் சுமார் 35 கிலோமீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளன.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா-பிரிட்டன் கூட்டு ராணுவத் தளமான 'டியாகோ கார்சியா'வை நோக்கி 4,000 கிலோமீட்டர் தொலைவு பாயக்கூடிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் நேற்று ஏவியதாக இஸ்ரேலிய ராணுவத் தளபதி ஐயல் ஜமீர் தெரிவித்தார். இதன் மூலம் ஈரானின் தாக்குதல் அபாயம் மேற்கு ஆசியாவையும் தாண்டி விரிவடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தியது இதுவே "முதல் முறை" என்றும் இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்டது. ஈரான் ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு, அமெரிக்கா பிரிட்டன் ராணுவத் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 21) பிரிட்டன் அரசாங்கம் அனுமதி வழங்கியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, ஈரானில் 2,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்: ஈரான் எதிர்வினை என்ன?
ராமதாஸ் - சசிகலா கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ‘அதிர்ச்சி’... ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in