Published : 22 May 2023 01:22 PM
Last Updated : 22 May 2023 01:22 PM

இந்தியாவின் தலைமையை ஏற்று பின்தொடருவோம்: பபுவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபி

போர்ட் மோரஸ்பி: தெற்குலகின் குரலாக ஒலிக்கும் இந்தியாவின் தலைமையை ஏற்று பின்தொடருவோம் என்று பபுவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபி தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவை ஒட்டி உள்ள நாடான பபுவா நியூ கினியாவுக்குச் சென்றுள்ளார். தலைநகர் போர்ட் மோரஸ்பி சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபி விமான நிலையம் வந்து வரவேற்றார். அப்போது, பிரதமர் மோடியின் காலைத் தொட்டு அவர் ஆசிர்வாதம் பெற்ற நிகழ்வு பரவலாகப் பேசப்பட்டது.

போர்ட் மோரஸ்பி நகரில் இன்று(திங்கள் கிழமை) நடைபெற்ற இந்தியா - பசுபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பேசிய ஜேம்ஸ் மராபி, தெற்குலகின் குரலாக ஒலிக்கும் இந்தியாவின் தலைமையை ஏற்று தங்கள் நாடு பின்தொடரும் என கூறினார். அவரது உரை விவரம் வருமாறு: "உலக வல்லரசு நாடுகளின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட நாடாக எங்கள் நாடு உள்ளது. தெற்குலகின் தலைவராக நீங்கள்(பிரதமர் மோடி) இருக்கிறீர்கள். சர்வதேச விவகாரங்களில் உங்கள் தலைமையை ஏற்று நாங்கள் பின்தொடருவோம்.

ரஷ்யாவுடனான உக்ரைன் போர் அல்லது உக்ரைனுடனான ரஷ்யா போர் காரணமாக, எங்களின் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. சிறிய பொருளாதார நாடான நாங்கள், அதிக விலை கொடுத்து எரிபொருளையும், மின்சாரத்தையும் பெறும் நிலையில் உள்ளோம். அவர்களின் புவி அரசியல் மற்றும் அதிகாரப் போட்டி காரணமாக நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.

ஜி20, ஜி7 போன்ற சர்வதேச அமைப்புகளில் சிறிய நாடுகளுக்கான வலிமையான குரலாக இந்தியா ஒலிக்க வேண்டும். பசுபிக் தீவு நாடுகள் சிறியதாக இருக்கலாம். எண்ணிக்கையில் குறைந்ததாக இருக்கலாம். ஆனால், பசுபிக் பிராந்தியத்தில் நாங்கள் பெரிய நாடுகள். வர்த்தகம், சுற்றுலா போன்றவற்றுக்காக உலகம் எங்களைப் பயன்படுத்திக்கொள்கிறது.

சர்வதேச அரங்குகளில் நீங்கள்(இந்தியா) எங்களுக்காக வாதாட வேண்டும். சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள வளரும் நாடுகளுக்காக நீங்கள் போராட வேண்டும். பசுபிக் நாடுகளின் தலைவர்கள் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டும். அவர்களோடு உரையாட வேண்டும். இதன்மூலம், இந்தியா - பசுபிக் நாடுகள் இடையேயான உறவு வலுப்பெறும். பசுபிக் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தெற்குலகின் தலைவரான நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்" என்று பபுவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபி உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x