Last Updated : 29 Sep, 2017 10:28 AM

 

Published : 29 Sep 2017 10:28 AM
Last Updated : 29 Sep 2017 10:28 AM

அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றம் கலைப்பு: ஜப்பானில் அக்டோபர் 22-ல் மீண்டும் தேர்தல் - பிரதமர் அபேவுக்கு புதிய சவால்

ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 22-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு உள்ளது. எனினும் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு, புதிதாகத் தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 25-ம் தேதி அபே அறிவித்தார். அதன்படி ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ் சபை நேற்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.

பிரதமர் அபேவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாடாளுமன்ற சபாநாயகர் நேற்று வெளியிட்டார். இதையடுத்து, அக்டோபர் மாதம் 22-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஷின்சோ அபே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடினமான போட்டி இன்று தொடங்கிவிட்டது. ஜப்பான் மக்களை எப்படி பாதுகாப்பது என்பதற்கான தேர்தல் இது. வடகொரியாவிடம் இருந்து பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம். ஜப்பானை கடலில் மூழ்கடிப்போம் என்று வடகொரியா பகிரங்கமாக மிரட்டுகிறது. ஜப்பான் வான்வெளியில் 2 முறை ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா.

இந்த மிரட்டலை சமாளிக்கவும், வடகொரியா விஷயத்தில் கொள்கை ரீதியாக தீர்க்கமான முடிவெடுக்கவும் எனது கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாம் போராட வேண்டி உள்ளது. இவ்வாறு ஷின்சோ அபே கூறினார்.

இதற்கிடையில் டோக்கியோ பெண் கவர்னர் யூரிகோ கோய்கி, சமீப காலமாக ஜப்பான் அரசியல் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்தார். அவர் ‘பார்ட்டி ஆப் ஹோப்’ என்ற புதிய கட்சியை கடந்த புதன்கிழமை தொடங்கினார். இவர் பிரதமர் அபேவுக்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளார். எனினும் அபேவுக்கு மக்கள் ஆதரவு அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் கட்சியை யூரிகோ கோய்கி வழிநடத்தினாலும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. வரும் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கான வேலைகளில் கவனம் செலுத்த போவதாக அவர் கூறியுள்ளார். இதனால் ஜப்பான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x