Published : 12 Sep 2017 09:30 AM
Last Updated : 12 Sep 2017 09:30 AM

உலக மசாலா: புதிய வரவு பிங்க் சாக்லெட்!

நெ

ஸ்லே நிறுவனம் ஒயிட் சாக்லெட் கண்டுபிடித்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று டார்க், மில்க், ஒயிட் என்று 3 முக்கியமான வகைகளில் சாக்லெட்கள் கிடைக்கின்றன. தற்போது நான்காவதாக இணைந்திருக்கிறது ரூபி பிங்க் சாக்லெட். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பேர்ரி கால்பாட், உலகின் மிகப் பெரிய கோகோ தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று. கடந்த 13 ஆண்டுகளாக ரூபி கோகோ விதைகளில் இருந்து இளஞ்சிவப்பு வண்ண சாக்லெட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த வகையான கோகோ ஈக்வடார், பிரேசில், ஐவரி கோஸ்ட் உட்பட பல நாடுகளில் விளைவிக்கப்படுகின்றன. உலகிலேயே முதல் முறையாக இந்த ரூபி கோகோ விதைகளில் இருந்து இயற்கையான முறையில் இளஞ்சிவப்பு சாக்லெட்டை உருவாக்கியிருக்கிறார்கள். சீனாவின் ஷாங்காய் பகுதியில் விற்பனைக்கு வந்த இந்த சாக்லெட் குறித்து விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இளஞ்சிவப்பு சாக்லெட் லேசான புளிப்புச்சுவையுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்குக் காரணம் இதில் செயற்கையாக எந்தப் பொருளும் சேர்க்கப்படவில்லை. இன்னும் 6 மாதங்களுக்குப் பிறகே, உலகின் மற்ற பகுதிகளுக்கு இளஞ்சிவப்பு சாக்லெட்டை விற்பனைக்கு கொண்டுவர இருக்கிறது ஸ்விட்சர்லாந்து நிறுவனம். “நாங்கள் இயற்கையான சுவையில் இந்த சாக்லெட் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். செயற்கை வண்ணமோ, நறுமணமோ இதில் சேர்க்கப்படவில்லை. சாக்லெட் வரலாற்றிலும் தயாரிப்பிலும் இளஞ்சிவப்பு சாக்லெட் ஒரு மைல்கல்” என்கிறார் பேர்ரி கால்பாட்டின் முதன்மை செயல் அலுவலர்.

புதிய வரவு பிங்க் சாக்லெட்!

பெ

ரு நாட்டின் பிஸ்கோ நகரில் ட்ரக் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார் அலெஜான்ட்ரோ ராமோஸ் மார்டினெஸ். 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மிக மோசமான விபத்து நிகழ்ந்தது. 30 மீட்டர் ஆழத்தில் மிக வேகமாக விழுந்துவிட்டார். அப்போது ரத்தத்திலுள்ள நைட்ரஜன் அவரது தசைகளில் மிகப் பெரிய குமிழ்களை உருவாக்கிவிட்டது. மார்டினெஸின் உருவம் காற்றடைத்த பலூன் போல மிக மோசமாக மாறிவிட்டது. உடலிலுள்ள நைட்ரஜனை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான விஷமில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தக் குமிழ்கள் எல்லாம் ரத்தத்திலும் தசையிலும் சேர்ந்து உருவாகியிருக்கின்றன. இதனால் அளவுக்கு அதிகமான களைப்பு, தலைசுற்றல், குமட்டல், மூட்டு வலி போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. பக்கவாதம், மரணம் போன்ற துயரத்திலும் தள்ளிவிடலாம். உடலில் உள்ள நைட்ரஜனை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெளியேற்ற முடியும். ஓர் இயந்திரத்துக்குள் மார்டினெஸை நுழைத்து, ஆக்ஸிஜனைச் செலுத்தி, நைட்ரஜனை வெளியேற்றுகிறார்கள். ஆக்சிஜன் தெரபி மூலம் இதுவரை 30 சதவிகித நைட்ரஜன் குமிழ்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. இன்னும் குறைந்தது 100 தடவையாவது ஆக்சிஜன் தெரபி செய்தால்தான் மார்டினெஸ் முழுமையாகக் குணம் பெற முடியும். “இந்த பலூன்களால் 30 கிலோ எடை அதிகரித்தது போன்று இருக்கும். வலி உயிர் போகும். வலி நிவாரணிகளைச் சாப்பிட்டு, காலத்தைத் தள்ளுகிறேன். 64 லட்சம் ரூபாயில் ஓர் அறுவை சிகிச்சை இருக்கிறது என்கிறார்கள். ஒரு சாதாரண ட்ரக் ஓட்டுநரால் அவ்வளவு பணத்துக்கு எங்கே போகமுடியும்?” என்கிறார் மார்டினெஸ்.

விபத்தை விடக் கொடுமையாக இருக்கிறதே..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x