Published : 03 Sep 2017 11:25 AM
Last Updated : 03 Sep 2017 11:25 AM

சீனாவில் இன்று பிரிக்ஸ் மாநாடு தொடக்கம்

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினராக உள்ளன. அந்த அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாவட்டம் ஜியாமென் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரேசில் அதிபர் மைக்கேல் டேமர், தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மோடி இன்று பயணம்

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரிக்ஸ் தலைவர்கள் சீனாவில் முகாமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டெல்லியில் இருந்து சீனா புறப்படுகிறார்.

சீனாவின் அழைப்பின்பேரில் எகிப்து, கென்யா, தாஜிகிஸ்தான், மெக்ஸிகோ, தாய்லாந்து நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

இந்தியா எதிர்ப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் புதிய நாடுகளை உறுப்பினர்களாக சேர்க்க சீனா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சீனா தனது முயற்சியை கைவிட்டுள்ளது.

மேலும் சீனாவின் கனவு திட்டமான ‘ஒரே மண்டலம் ஒரே சாலை’ திட்டத்தை பிரிக்ஸ் மாநாட்டில் திணிக்கவும் சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கும் இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக சீனாவில் சில மாதங்களுக்கு முன்பு பிரமாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தானின் குவாதர் துறைமுகம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் ‘ஒரே மண்டலம், ஒரே சாலை’ திட்டத்தின் கீழ் வருகின்றன. எனவே இந்தத் திட்டத்துக்கு இந்தியா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக சீனா அழைப்பு விடுத்தபோதும் பெய்ஜிங் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது.

இவை தவிர டோக்லாம் எல்லைப் பிரச்சினையால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போர் பதற்றம் நீடித்தது. எனினும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடந்த கால கசப்புகளை மறந்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x