Published : 31 Mar 2023 02:20 PM
Last Updated : 31 Mar 2023 02:20 PM

சூரியனில் 2-வது ராட்சத துளை: பூமியை விட 30 மடங்கு பெரிது!

நமது பால்வளி அண்டத்தில் உள்ள பிரமாண்ட நட்சத்திரமான சூரியனில் சமீப ஆண்டுகளாகவே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் சூரியனின் மேற்பரப்பில் ராட்சத 'துளை' ஒன்று தோன்றியுள்ளது. இந்தத் துளையை கரோனல் துளைகள் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த துளை பூமியை விட 30 மடங்கு அளவு பெரியது என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, “இந்த துளை காரணமாக வெள்ளிக்கிழமைக்குள் பூமியை நோக்கி 1.8 மில்லியன் அளவு சூரியக் காற்று வந்தடையும். இதனை தெற்காசிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் உணரலாம். இந்த வெடிப்புகளிலிருந்து வெளியேறும் வெப்பக் கதிர்கள் ரேடியோ தகவல் தொடர்புகள், விண்கலம், விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். மேலும், இந்தத் துளையின் மூலம் பூமியின் மேற்பரப்பில் இன்னும் கூடுதல் இடங்களில் துருவ ஒளிகள் தோன்றலாம்” என்றனர்.

சூரியனில் ஏற்படும் இந்த கரோனல் துளைகள் மிகவும் பொதுவானவை, ஆனால், அவை பெரும்பாலும் சூரியனின் துருவங்களை நோக்கி தோன்றும், அங்கு அவற்றின் சூரிய காற்று விண்வெளியில் வீசப்படும். ஆனால் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சூரியனில் ஏற்படும் மாறுதலுக்கு சூரியன் தயாராகி வருவதால், இந்தத் துளைகள் சூரியனின் பூமத்திய ரேகைக்கு அருகில் தோன்றும் வாய்ப்புகள் அதிகம் என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் பேராசிரியர் மேத்யூ ஓவன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, பிப்ரவரி மாதம் சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டதாகவும், அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும்புயலைப் போல் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது சூரியனில் இரண்டாவது துளை உருவாகி இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x