Published : 05 Sep 2017 09:15 AM
Last Updated : 05 Sep 2017 09:15 AM

தீவிரவாத அமைப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகள் கடும் கண்டனம்

உறுப்பு நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முதன்முறையாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பின் 9-வது உச்சி மாநாடு சீனாவின் புஜியான் மாகாணம் ஜியாமென் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரேசில் அதிபர் மைக்கேல் டேமர், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டின் 2-வது நாளான நேற்று ‘பிரிக்ஸ் ஜியாமென் பிரகடனம்’ வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஹக்கானி நெட்வொர்க் மற்றும் தலிபான், ஐஎஸ்ஐஎல்/டாய்ஷ், அல்காய்தா இதன் துணை அமைப்புகள் ஆகியவை இந்த பிராந்தியத்தில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தீவிரவாதத்தால் ஆப்கனைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே, இதுபோன்ற தீவிரவாத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எந்த வடிவத்தில் இருந்தாலும் எந்த வகையிலும் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. எனவே, தீவிரவாத செயலில் ஈடுபடுவோர், ஒருங்கிணைப்போர், ஆதரவு அளிப்போர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறோம்.

மேலும் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க, ஐ.நா. சபையில் சர்வதேச உடன்படிக்கையை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு மற்ற உலக நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மீது நேரடியாக குற்றம்சாட்டப்படவில்லை என்றாலும், அங்கிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் பெயர்கள் முதன்முறையாக பிரிக்ஸ் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளன. இது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாகவும் பாகிஸ்தானுக்கு பாதகமான அம்சமாகவும் கருதப்படுகிறது.

குறிப்பாக, பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாவை உறுப்பினராகக் கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பு இத்தகைய பிரகடனத்தை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், பாகிஸ்தான் மீதான சீனாவின் கொள்கையில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு அமைப்புகளின் தீவிரவாதிகளை ஐ.நா. சபையின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என பிரிக்ஸ் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பேச்சு

மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பெரும்பாலான உலக நாடுகளில் நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், பிரிக்ஸ் நாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருகின்றன. அத்துடன் உலகில் நிலைத்தன்மையை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் பங்களிப்பு செய்கின்றன.

வேளாண்மை, கலாச்சாரம், சுற்றுச்சூழல், விளையாட்டு, தகவல் தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாம் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

வறுமை ஒழிப்பு, சுகாதாரம், திறன், உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம், எரிசக்தி மற்றும் கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதிலும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். பிரிக்ஸ் நாடுகளில் தொடர்ந்து அமைதி நிலவவும், நிலையான வளர்ச்சிக்கும் வலுவான கூட்டணியும் ஒற்றுமையும் அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x