Published : 23 Feb 2023 07:13 PM
Last Updated : 23 Feb 2023 07:13 PM

‘3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவை சிகிச்சை’ - வியப்பில் இஸ்ரேல் ஆய்வாளர்கள்

ஆராய்சியின்போது கண்டெடுக்கப்பட்ட எலும்பு எச்சங்கள்

இஸ்ரேலில் கி.மு.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, இறந்த இரண்டு சகோதரர்களின் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தபோது, அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருத்தது. இறந்தவர்களில் ஒருவருக்கு அவர் இறப்பதற்கு சற்று முன்பு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இம்மாதிரியான அறுவை சிகிச்சைகள் மண்டை ஓட்டு அறுவை சிகிச்சைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை கிழக்குப் பகுதிகளில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “பண்டைய நகரமான டெல் மெகிடோவில் உள்ள ஒரு கல்லறையின் அகழ்வாராய்ச்சியின் போது கிமு 1550 முதல் கிமு 1450 வரையிலான வெண்கல காலத்தில் வாழ்ந்த சகோதரர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் மூத்த சகோதரர் (இவருடைய வயது 20 - 40 வயதுக்குள்ளாக இருக்கலாம்) மண்டை ஓட்டில் அறுவை சிகிச்சை செய்தற்கான தடயங்கள் இருந்தன. மண்டை ஓட்டில் 1.2 இன்ச் அளவில் ஓட்டை இருந்தது. இது தொடர்பாக நாங்கள் நடத்திய ஆராய்ச்சியில் மூளை தொடர்பான அறுவை சிகிச்சைகள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகளவில் பரவலாக செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த தடயங்கள் மூலம் இப்பகுதியின் மருத்துவம் மற்றும் கலாச்சாரம் குறித்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

டெல் மெகிடோ நகரம் வெண்கல காலத்தில் வணிக ரீதியாக செல்வாக்கு மிக்க பகுதியாக இருந்தது. நாங்கள் கண்டெடுத்த எலும்பு கூடுகளின் சொந்தக்காரர்களும் நல்ல வளமையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும். டிஎன்ஏ சோதனை மூலம் அவர்கள் சகோதரர்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். மூத்த சகோதரருக்கு ஏன் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என உறுதியாக கூறமுடியவில்லை. எனினும் அவர் கால்-கை வலிப்பு, தலையில் அழுத்தம் போன்ற நோயினாலும், மரபணு நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x