Published : 31 Jan 2023 06:14 PM
Last Updated : 31 Jan 2023 06:14 PM

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்

அரிந்தம் பக்சி | கோப்புப் படம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று நடைபெற்ற மதிய நேர தொழுகையின்போது நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 93 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்புப் படையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள மசூதி என்பதால், தொழுகையின்போது காவல்துறை, ராணுவம், உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருந்துள்ளனர்.

இந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதி, தொழுகையின்போது முன் வரிசையில் இருந்து குண்டை வெடிக்கச் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் தலிபான் அமைப்பைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் மசூதியின் இமாம் நூர் அல் அமினும் கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''பெஷாவரில் நேற்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x