Published : 20 Jan 2023 06:45 PM
Last Updated : 20 Jan 2023 06:45 PM

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு | இலங்கை 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இந்தியா வலியுறுத்தல்

கொழும்பு: இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இலங்கை வலுவாக இருப்பதை இந்தியா எப்போதுமே ஆதரித்து வருகிறது.

அதிகாரப் பகிர்வு தொடர்பான கேள்விக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே விளக்கம் அளித்தார். அப்போது, 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதும், மாகாணத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம் எனும் இந்தியாவின் கருத்தை தெரிவித்தேன்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெய்சங்கர், இலங்கைத் தமிழர்களின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் தேவை குறித்து பேசி இருக்கிறேன் என தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கே உடனான சந்திப்பை அடுத்து ஜெய்சங்கர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''இன்று காலை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்ததில் மகிழ்வடைகின்றேன். அயலுறவுக்கு முதலிடம் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டினை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக்கான எனது பயணம் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

நம்பகமான ஓர் அயல்நாடாகவும் பங்காளியாகவும் உள்ள இந்தியா, தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இலங்கைக்காக எந்தவொரு ஆதரவையும் வழங்க தயாராக உள்ளது. தேவையான இந்நேரத்தில் நாம் இலங்கையுடன் துணைநிற்பதன் மூலம், இலங்கை எதிர்கொள்ளும் சகல சவால்களையும் வெற்றிகொள்ள முடியுமென நம்புகின்றோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பொங்கல் விழாவை முன்னிட்டு இலங்கை அதிபரின் ஊடகப் பிரிவுக்கு நேர்காணல் அளித்த அதிபர் விக்ரமசிங்கே, ''இலங்கையின் வடக்கிலும், தமிழர்களிடமும் பிரச்சினை இருக்கிறது. இதை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இலங்கையின் வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.'' என தெரிவித்திருந்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை 13வது சட்டத்திருத்தம் உறுதிப்படுத்துகிறது. இந்தியா - இலங்கை இடையே 1987ல் நடைபெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை ஓரளவு மீண்டிருப்பதற்கு இந்தியாவின் உதவியே மிக முக்கிய காரணம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதன் விவரம்: “இந்தியாவால்தான் ஓரளவு மீண்டோம்” - நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இலங்கை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x