Published : 17 Dec 2022 12:52 PM
Last Updated : 17 Dec 2022 12:52 PM

ஹிஜாப் போராட்டமும், ஈரானை உலுக்கும் தொடர் மரணங்களும்!

ஐடா ரோஸ்டமி | கோப்புப் படம்

தெஹ்ரான்: ஈரானில் தீவிரமடைந்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மனதை உலுக்கும் மரணங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன.

மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இரு மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பேர் கடந்த வாரம் பொது வெளியில் தூக்கிலிடப்பட்டனர். இதுவரை 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரான் அரசை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்கள் நாளும் வன்முறைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அவ்வாறு சமீபத்தில் ஏற்பட்ட மரணம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐடா ரோஸ்டமி (36), என்ற மருத்துவர் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு காயமடைந்த போராட்டக்காரர்களுக்கு தனது குழுவின் உதவியுடன் சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களாக ஐடாவை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில், கொடூரமான முறையில் கொல்லப்பட்டு சாலையில் கிடத்திருக்கிறார் ஐடா.

ஈரானின் பாதுகாப்புப் படையினர்தான் ஐடாவின் இந்த கொடூர மரணத்துக்கு காரணம், ஐடா போராட்டக்காரர்களுக்கு உதவியது அவர்களுக்கு பிடிக்கவில்லை அதனால் ஐடா கொல்லப்பட்டிருக்கிறார் என்று அங்குள்ள மனித உரிமை அமைப்புகளும், குடும்பங்களும் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்படுப்பவர்களின் முன்னால் அவர்களது குடும்பத்தினர் நடனமாடும் காட்சிகளும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

ஈரான் கால்பந்தாட்ட வீரர், அமீர் நசீர் உள்ளிட்ட 20 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஈரான் அரசு நீக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x