Published : 18 Nov 2022 07:52 PM
Last Updated : 18 Nov 2022 07:52 PM

வாரி வழங்கிய அமெரிக்கா... வேகமாக தீர்த்த உக்ரைன்... - ஆயுதப் பற்றாக்குறையால் முடிவுக்கு வருகிறதா போர்?

உக்ரைனுக்கு தாராளமாக ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா, நேட்டோ நாடுகளில் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் விரைவில் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. வெறும் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலை தொடுத்த ரஷ்யா இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. உக்ரைன் நிலைகுலைந்தது. இந்தப் போர்தான் உலகிலேயே மிகக் குறுகிய காலம் நடந்த போராக இருக்கும் என்றெல்லாம் போர் நிபுணர்கள் கணித்தனர். ஆனால், அடுத்த நாளே நிலைமை மாறியது. அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அமெரிக்காவே தாராளம் காட்டும்போது நேட்டோ உறுப்பு நாடுகள் சும்மா இருக்க முடியுமா என்ன? நேட்டோ உறுப்பு நாடுகளும் ஆயுத உதவி, நிதியுதவி, உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் என தாராளம் காட்டத் தொடங்கின.

‘எங்களை நேட்டோவில் இணைத்துக் கொள்ளுங்கள்’ என்ற கோரிக்கை வைத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாளடைவில் அந்த அணியில் இல்லாமலே அந்த அணியில் இருக்கும் உறுப்பு நாடுகள் பெறும் அத்தனை உதவிகளையும் அனுபவிப்பதால் நிம்மதி பெருமூச்சு விடலானார். ஆயுதங்களையும், போர் உத்திகளையும் இலவசமாக அமெரிக்காவில் இருந்து இன்று வரை பெற்றுக் கொண்டிருக்கிறது உக்ரைன். இதனால்தான் கீவ் வரை முன்னேறிய ரஷ்யப் படைகள் வேகமாகப் பின்வாங்கியது. லூஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கார்சேவ் உள்ளிட்ட 4 மாகாணங்களை மட்டும் கையில் வைத்துக் கொண்டு போராடி வருகிறது.

இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சர்வதேச தொடர்பு வல்லுநர்கள், எல்லாம் ஒரு ஈகோதான் என்று வெகு எளிமையான பதிலைக் கூறுகின்றனர். கூடவே, அதற்கான பின்னணியையும் விளக்குகின்றனர். ரஷ்யாவுடன் நேரடியாக போரில் ஈடுபடுவது மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும். அதேவேளையில் ரஷ்யா, உக்ரைனை வெல்ல அனுமதிப்பதும், அதனுடைய ராணுவ பலத்தை உலகிற்கு பறைச்சாற்றுவதாகிவிடும். அப்படியென்றால் வெறும் ஆயுத உதவிகளை மட்டும் வழங்கினால், அது போரில் நேரடியாக ஈடுப்பட்டதாகவும் இருக்காது ரஷ்யாவுக்கும் செக் வைத்ததாக இருக்கும் என்பது மேற்குலகின் கணிப்பு. அமெரிக்காவின் தலைமையில் மேற்குலகு, நேட்டோ குழுமம் என அனைத்தும் இந்தப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தன.

ஆனால், அவர்கள் கணிப்பில் வரக்கூடிய பக்கவாட்டு பிரச்சினைகளை சரியாக ஊகிக்கவில்லை. அதில் முக்கியமானது ஆயுதங்கள் காலியாவது. நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்துமே பல்வேறு அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதால் ஓரளவு மட்டுமே ஆயுதங்களை உற்பத்தி செய்து வைத்திருந்தன. அவை அந்தந்த நாடுகளின் தற்காப்புக்கு போதுமானவையாகவே இருக்கின்றன. இந்தியா, சீனா போன்று ராணுவத்திற்கு அதிகம் செலவிடுவதில்லை பல ஐரோப்பிய நாடுகள். அப்படியான நாடுகள் இருக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கின. அமெரிக்கா பெருமளவில் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. உக்ரைனுக்கான அனைத்து போர் உத்திகளும் பென்டகனில் சிறப்பாக வகுத்துக் கொடுக்கப்படுகின்றன.

ஜெலன்ஸ்கி அமைதியாக பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு தளபதிகளை இயக்கினால் போதும். அவ்வப்போது வீடியோவில் தோன்றி பேசினால் போதும் என்றளவுக்கு சூழலை எளிமைப்படுத்திக் கொடுத்திருக்கின்றன அமெரிக்காவும் நேட்டோ உறுப்பு நாடுகளும். பொதுவாக நேட்டோ தன் உறுப்பு நாட்டில் போர் என்றால்தான் இதுபோல் உதவிகளை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ரஷ்யா என்ற பொது எதிரியை சமாளிக்க அமெரிக்காவும், நேட்டோ உறுப்பு நாடுகளும், இன்னும் சில ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், உக்ரைன் சற்று பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக நேட்டோவும், அமெரிக்காவும் அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறது.

புதின், ஜெலன்ஸ்கி, பைடன்

உக்ரைனின் தீராப் பசி... - இந்த அதிருப்திக்குக் காரணம் உக்ரைனின் தீராப் பசி என்று கூறுகின்றனர் வல்லுநர்கள். ஆம், அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கான உதவி நிபந்தனைகளே இல்லாமல் இலவசமானது என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துவிட்டன. இலவசமாக போரை நடத்திக் கொள்ள உதவிகள் கிடைக்கும் போது பசியும் தீராதுதானே என்று கேள்வி எழுப்புகின்றனர் வல்லுநர்கள். அதனாலேயே ராணுவம், அரசியல், நிதி என எல்லா வகையான உதவிகளையும் எவ்வித தயக்கமும் இன்றி பெற்றுக் கொள்கிறது உக்ரைன். இதற்கான சில உதாரணங்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

'ரஷ்யா தோல்வி' என்ற ஒரேயொரு வார்த்தையைக் கேட்பதற்காக செய்யும் உதவிகள் எல்லாம் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை இப்போது அமெரிக்காவும், நேட்டோவும் உணரத் தொடங்கியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா தலைமையில் நேட்டோ உறுப்பு நாடுகள் முக்கிய ஆலோசனை நடத்தின. ஐரோப்பிய யூனியனின் தலைவர் ஜோசப் பேரல் பேசுகையில், "நேட்டோ உறுப்பு நாடுகளில் ராணுவத் தளவாடங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன என்று சொல்ல மாட்டேன். ஆனால் வெகுவாகக் குறைந்துவிட்டன. பெருமளவிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வாரி வழங்கியதே இதற்குக் காரணம்" என்றார்.

உக்ரைனுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அதற்குத் தெரிந்ததெல்லாம் நேட்டோ நாடுகள் உயர் ரக டாங்கர்கள், ஏவுகணைகள், ஆயுதங்களை நமக்கு வாரி வழங்கும் என்பது மட்டுமே. அந்த ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவை புறமுதுகிட்டு ஓடச் செய்யலாம் என்பது மட்டுமே உக்ரைனின் அக்கறையாக உள்ளது. கடந்த பிப்ரவரி தொடங்கி இதுவரை அமெரிக்கா மட்டும் உக்ரைனுக்கு 15.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியுள்ளது. இதில் 155 mm ஹோவிட்சர் மற்றும் நீண்ட தூர தாக்குதலை கச்சிதமாக முடிக்கும் HIMARS ஹைமார்ஸ் ஆகியனவும் அடங்கும். இவற்றை உக்ரைன் வெறும் 2 வாரங்களில் 14 நாட்களில் காலி செய்துவிட்டு மீண்டும் கேட்கின்றனவாம். ஆனால், இந்த ஆயுதங்களை உற்பத்தி செய்ய மாதங்கள் பிடிக்கும். அப்படியெனில் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் நேரத்தைவிட அவற்றை காலி செய்யும் வேகம் பல நூறு மடங்கு அதிகம்.

அமெரிக்க ராணுவ பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் டேவ் டெஸ் ராஸ் கூறுகையில், "155 mm ஹோவிட்சரை தயாரிக்க குறைந்தது ஒரு வருடமாகும். ஆனால் உக்ரைன் அதனை இரண்டே வாரங்களில் தீர்த்து விடுகிறது" என்று கூறியுள்ளார். இப்போது அமெரிக்காவும், நேட்டோ உறுப்பு நாடுகளும் இது குறித்து தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இப்போதைக்கு அமெரிக்காவுக்கு இரண்டே வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று அமெரிக்கா தன் சொந்த ரிஸ்கில் தொடர்ந்து ஆயுதங்களை தொடர்ந்து வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஆயுத உதவியை படிப்படியாகவோ முற்றிலுமோ நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மூன்றாவது வாய்ப்பாக இப்போது வழங்கும் உயர்ரக ஆயுதங்களை நிறுத்திக் கொண்டு சாதாரண ஆயுதங்களை வழங்க வேண்டும்.

ஆயுதங்களின் அளவைக் குறைக்காமல் தரங்களை குறைப்பதால் போர் உதவியை நிறுத்தியது போன்றும் இருக்காது. அதேபோல் சொந்த ஆயுதங்களை இழக்க வேண்டியதும் இருக்காது. ரஷ்யாவிடம் நேரடியாக தோல்வியை ஒப்புக் கொண்டதாகவும் இருக்காது. அதாவது இதுவரை 155 mm ஹோவிட்சரை உக்ரைனுக்கு வழங்கிவந்த நிலையில் இனி 105 mm ஹோவிட்சர்களை வழங்கலாம்.

ஆனால், சொந்தச் செலவில் பிரச்சினையை இழுத்துப் போட்டுக் கொண்ட அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இந்த சிக்கலில் இருந்து எவ்வித பாதிப்பும் இல்லாமல் ரஷ்யாவின் ஏளனத்துக்கும் உள்ளாகாமல் வெளியே வர முடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்” என்றார். அதுபோல் ஒருவேளை இந்தப் போர் ஆயுதப் பற்றாக்குறையால் முடிவுக்கு வந்தாலும் வரலாம் என்றும் கூறுகின்றனர்.

தொகுப்பு: பாரதி ஆனந்த்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x