Published : 11 Nov 2022 07:11 PM
Last Updated : 11 Nov 2022 07:11 PM

‘பிடித்தமான பட்டர் சிக்கன்’ - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், இந்திய உணவும்!

நெதன்யாகு (இடது)

ஜெருசலேம்: இஸ்ரேலின் நீண்டகால பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விருப்பமான உணவுப் பட்டியலில் இந்திய உணவுகளுக்கு எப்போது முதலிடம் உண்டு என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்திய பொதுத் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் நெதன்யாகுவின் இந்திய உணவின் மீதான காதலை டெல் அவிவ்வில் உள்ள இந்திய ஓட்டல் உரிமையாளர் ஒருவர் விவரித்திருக்கிறார். நெதன்யாகு இஸ்ரேலில் உள்ள ‘தந்தூரி டெல் அவிவ்’ ஓட்டலில் பட்டர் சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

ஆம்... வாரத்திற்கு இரண்டு முறையாவது பட்டர் சிக்கனை நெதன்யாகு ரசித்து சாப்பிட்டு விடுவார் என்கிறார் ‘தந்தூரி டெல் அவிவ’ ஓட்டல் உரிமையாளர் ரீனா புஷ்கர்னா.

இதுகுறித்து ரீனா பேசும்போது, “நெதன்யாகுக்கு பட்டர் சிக்கன், கராகி சிக்கன் மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் இஸ்ரேல் பிரதமருக்கு மசாலா தடவி தீயில் சுட்ட அனைத்து உணவுப் பொருட்களும் பிடிக்கும். இஸ்ரேலில் தந்தூரி டெல் அவிவ் ஓட்டல் ஆரம்பித்து 40 வருடங்கள் ஆகின்றது. நாங்கள் இங்கு ஆரம்பித்தபோது யாரும் இந்திய உணவுகளை சாப்பிட்டதுகூட கிடையாது. நெதன்யாகு தனது மனைவி சாராவை காதலிக்கும்போது முதலில் இந்த ஓட்டலுக்குதான் அழைத்து வந்திருந்தார். அந்தக் காதல் வெற்றிகரமாக அமைந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்திய பிரதமர் மோடிக்கும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுக்கும் அற்புதமான நட்புறவு உள்ளது” என்றார்.

மேலும், 2017-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அவர் இந்திய உணவகத்தில் உண்ட உணவுகள் குறித்த தனது நினைவுகளையும் எங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்” என ரீனா தெரிவித்தார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலில் அண்மையில் தேர்தல் நடந்தது. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை தேர்தலில் பதிவான 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டதாக மத்திய தேர்தல் குழு தெரிவித்துள்ளது. அதன்படி நெதன்யாகுவின் லிக்குட் கட்சி 64-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இஸ்ரேலில் நடக்கும் 5-வது தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அடுத்து மீண்டும் நெதன்யாகு பிரதமராகும் சூழல் உருவாகியுள்ளது. இவர் ஏற்கெனவே 1996 முதல் 1999 வரையிலும் 2009-ல் இருந்து 2021 வரையிலும் இஸ்ரேலின் பிரதமராக இருந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x