Last Updated : 09 Nov, 2016 08:44 AM

 

Published : 09 Nov 2016 08:44 AM
Last Updated : 09 Nov 2016 08:44 AM

அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப் புகாரும் ஸ்னோடன் பதிலும்...

அமெரிக்க அதிபர் தேர்தல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், ஹிலாரி கிளிண்டன் தொடர்பான 6.5 லட்சம் இமெயில் களை எப்.பி.ஐ அமைப்பால் எப்படி குறுகிய காலத்தில் பரிசீலனை செய்ய முடிந்தது என டொனால்டு ட்ரம்ப் எழுப்பிய கேள்விக்கு விசுலூதி எட்வர்ட் ஸ்னோடன் டிவிட்டர் மூலம் பதில் அளித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு பிரச் சினைகள் விவாதிக்கப்பட்டாலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், முன்னர் அமைச்சராக இருந்தபோது அரசு இமெயில் சேவையைப் பயன்படுத்தாமல் தனிப்பட்ட இமெயில் சர்வரை பயன்படுத்திய பிரச்சினையும் அவரது தலை மேல் கத்தி போல தொங்கி கொண்டிருந்தது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. இது தொடர்பாக விசாரணை நடத்தி கடந்த ஜூலை மாதம் இமெயில் விவகாரத்தில் ஹிலாரி கிளிண்டன் குற்றமற்றவர் எனக்கூறியது.

இமெயில் விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. தேர்தல் நெருங்கிய நேரத்தில் புதிதாக கிளிண்டன் இமெயில் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த பிரச்சினைக்குத் தொடர்பில்லாத வேறு ஒரு வழக்கில் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது, ஹிலாரி கிளிண்டன் தொடர்பான 6.5 லட்சம் இமெயில்கள் கிடைத்தன.

ஹிலாரியின் உதவியாளர் ஹூமா அபிடினின் முன்னாள் ஆண் நண்பர் அந்தோனி வெய்னர் என்பவரின் லேப்டாப்பில் இருந்து இவை பெறப்பட்டவை. இந்த புதிய இமெயில்கள் ஹிலாரிக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில், புதிய இமெயில் ஆதாரங்களை பரிசீலித்துவிட்ட தாகவும் ஏற்கெனவே ஹிலாரி மீது குற்றமில்லை என தெரிவித்ததில் எந்த மாற்றமும் இல்லை என எப்.பி.ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமே அமெரிக்க காங்கிரஸுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட் டிருந்தார்.

இந்த தகவலால் ஹிலாரி தரப்பு நிம்மதி பெருமூச்சுவிட்டாலும் டொனால்ட் ட்ரம்ப் தரப்பு இதையே ஒரு குற்றச்சாட்டாக வைத்தது.

எட்டு நாட்களுக்குள் எப்படி 6.5 லட்சம் இமெயில்களைப் பரிசீலித்து பார்க்க முடியும்? என கேள்வி எழுப்பிய ட்ரம்ப், ஹிலாரிக்கு சார்பாக ஏதோ ஏமாற்று வேலை நடந்திருக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இது தொடர்பாக பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தேர்தல் உச்ச கட்டத்தில் வெடித்த இந்த சர்ச்சைக்குச் சற்றும் எதிர்பாராத திசையில் இருந்து பதில் கிடைத்தது. ஆம், அமெரிக்க அரசால் தேடப்படும் நபரான விசுலூதி எட்வர்ட் ஸ்னோடன், டிவிட்டரில், இது சாத்தியமே என பதில் அளித்தார். அமெரிக்காவின் பத்திரிகையாளரான ஜெப் ஜார்வீஸ் என்பவர், இமெயில் குவியல்களைப் பரிசீலிக்கும் வழி பற்றி கேட்டதற்கு ஸ்னோடன், ஒற்றை வரியில் பதில் அளித்திருந்தார். அவரது பதில், சிசி, பிசிசி கொண்டவற்றை விலக்கவும், இரண்டு செட்களையும் ஹேஷ் செய்து ஒப்பிட்டுப் பார்த்தால் போதும். பழைய லேப்டாப்பிலேயே இதை மணிக்கணக்கில் முடித்துவிடலாம் என அவர் கூறியிருந்தார்.

ஸ்னோடன் விளக்கமே கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம். ஆனால் இதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

விஷயம் என்ன எனில், புதிதாக கண்டெடுக்கப்பட்ட 6.5 லட்சம் இமெயில்களில் ஏற்கனவே விசாரணையில் பரிசீலிக்கப்பட்டவை. எனவே இப்போது செய்ய வேண்டியது எல்லாம், முந்தைய மெயில்களை விலக்கி விட்டு, புதியவற்றை மட்டும் பார்ப்பதுதான். இதற்காக, முதலில் ஹிலாரியிடம் இருந்து சென்ற மற்றும் அவருக்கு வந்த மெயில்கள் தவிர மற்றவற்றை விலக்கிவிட வேண்டும். பின்னர் இரண்டு இமெயில் குவியல்களையும் ஹேஷ் செய்து கொள்ள வேண்டும். என்கிரிப்ஷன் பாணியில் மூல செய்தியைச் சுருக்கமான வடிவாக மாற்றிக்கொள்ளும் முறையைதான் இப்படி சொல்கின்றனர். ஹேஷ் செய்த பிறகு ஒப்பிட்டு பார்ப்பது இன்னும் சுலபம். ஏதேனும் வேறுபாடு இருந்தால் தெரிந்துவிடும்.

இப்படி நகல்களை விலக்கிய பின் புதிய மெயில்களை பரிசீலிப்பது சுலபம். அவற்றை முழுமையாக படிக்க வேண்டும் என்று கூட இல்லை, அரசு விவகாரங்களுக்கான முக்கிய வார்த்தைகள் அதில் இடம்பெற் றுள்ளனவா? என ஸ்கேன் செய்தாலே போதும்.

இதே விளக்கத்தை சைபர் வல்லுநர்களும் அளித்துள்ளனர்.

டிவிட்டரில் பலர் 6.5 லட்சம் மெயில்களை எப்படி சில நாட்களில் பரிசீலிப்பது எப்படி எனும் கேட்பதையே கிண்டல் செய்திருந்தனர். இதைவிட அதிகமான தரவுகளை எல்லாம் கம்ப்யூட்டர் பிரித்து மேய்ந்துவிடும் அதற்கான வழிகள் எல்லாம் இருக்கிறது என்பதுபோல கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் அமெரிக்க தேர்தல் முடிவில் எந்த அளவு தாக்கம் செலுத்தும் எனத் தெரியவில்லை, ஆனால் டிஜிட்டல் யுகத்தில் தரவுகளை அலசி ஆராயும் நுட்பங்கள் தொடர்பான பாடமாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x