Published : 29 Oct 2022 09:09 AM
Last Updated : 29 Oct 2022 09:09 AM

யுபிஐ தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர இந்தியா முன்வருவது பெருந்தன்மைமிக்கது - காமன்வெல்த் பொதுச் செயலர் கருத்து

லண்டன்: யுபிஐ பரிவர்த்தனை இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகு இந்தியாவின் பணப்பரிவர்த்தனை நடைமுறை மிகப் பெரும் அளவில் மாற்றம் அடைந்தது. யுபிஐ வருகைக்குப் பிறகு இந்தியாவின் பணப்பரிமாற்றச் செயல்பாடு எளிமையாக மாறியது. தற்போது இந்தியாவில் பெட்டிக்கடை முதல் பெரிய அளவிலான வணிகப் பரிவர்த்தனை வரையில் யுபிஐ இன்றியமையாததாக மாறியுள்ளது. யுபிஐ கட்டமைப்பில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இந்நிலையில், மற்ற நாடுகளுடன் யுபிஐ தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள இந்தியா முன்வந்துள்ளது. அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் வங்கி கவர்னர்கள்
கூட்டத்தில் பங்கேற்ற இந்தியா, யுபிஐ தொழில்நுட்பத்தை ஏனைய நாடுகளுடன் பகிர விரும்புவதாக தெரிவித்தது. இந்தியாவின் இந்த முடிவை காமன்வெல்த் பொதுச் செயலர் பாட்ரிசியா ஸ்காட்லாந்து வரவேற்றுள்ளார்.

இந்தியாவின் முடிவு குறித்து பாட்ரிசியா ஸ்காட்லாந்து கூறுகையில், “இந்தியா மிகவும் பிரகாசமாக உள்ளது. தன் தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர விருப்பம் தெரிவித்திருப்பதானது இந்தியாவை மேலும் பிரகாசமாக்குகிறது. இந்தியாவின் பெருந்தன்மையை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியா போல வேறு சில நாடுகளும் இத்தகைய தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளன. ஆனால், இந்தியாதான் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி யுள்ளது. தவிர, அதை பகிரவும் முன்வந்துள்ளது.

யுபிஐ தொழில்நுட்பத்தை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்வது டிஜிட்டல் கட்டமைப்பில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியா அதன் டிஜிட்டல் கட்டமைப்பு மூலம் லட்சக்கணக்கான மக்களை ஏழ்மையிலிருந்து மீட்டுள்ளது. மக்களின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாக உதவித் தொகையை அனுப்புவதால், பணம் மக்களின் கைகளுக்கு உடனடியாக சென்று விடுகிறது” என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா டிஜிட்டல் தளத்தில் மிக வேகமாக பயணித்து வருகிறது.

கரோனா தடுப்பூசியை மக்களிடையே கொண்டு சேர்க்க இந்தியா ‘கோவின்’ செயலியை அறிமுகப்படுத்தியது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது சவாலாக பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா ‘கோவின்’ செயலி மூலம் தடுப்பூசி நடைமுறையை எளிமைப்படுத்தியது. அந்தத் தொழில்நுட்பத்தையும் இந்தியா வெளிநாடுகளுடன் பகிர முன்வந்தது. தான் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர இந்தியா முன்வருவது உலக அரங்கில் இந்தியா மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x