Published : 10 Oct 2022 02:11 PM
Last Updated : 10 Oct 2022 02:11 PM

ரஷ்யா - உக்ரைன் போர் | கீவ் உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்

உக்ரைனில் தலைநகர் கீவ் உள்ளட்ட நகரங்கள் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளாகின

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் மையப்பகுதியின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். கிரீமியா பாலத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பல மாதங்களாக உக்ரைன் தலைநகரில் அமைதி நிலவி வந்த நிலையில், திங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி 8.15 மணிக்கு தலைநகரின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. குண்டுவெடிப்பு நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக வானில் சைரன் ஒலி கேட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் குறித்து கிவ் நகரின் அவசரகால சேவை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். லிவி, டெர்னோபில், க்மெல்னிட்ஸ்கி, சைட்டோமிர், , க்ரோபிவ்னிட்ஸ்கி ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளதால் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், "உக்ரைன் முழுவதும் நடந்துள்ள குண்டுவெடிப்பால் பலர் இறந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது. பூமியிலிருந்து அகற்ற நினைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கிரீமியா தீபகற்ப பகுதியையும் ரஷ்யாவையும் இணைத்த கிரீமியா பாலத்தின் மீது கடந்த 8-ம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி பாலத்தில் வெடித்துச் சிதறியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. சரக்கு ரயிலின் 7 எரிபொருள் டேங்கர்கள் எரிந்து நாசமாகின.

இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்ய வட்டாரங்கள் கூறும்போது, “இதுவரை உக்ரைனின் ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தோம். ஆனால், உக்ரைன் ராணுவமோ தீவிரவாதிகளின் பாணியில் ரஷ்யாவின் பயணிகள் போக்குவரத்து பாலத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் பொது பயன்பாட்டுக்கான கட்டமைப்புகள் மீது தீவிரதாக்குதல் நடத்துவோம்" என்று தெரிவித்தன. ஆனால், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்க வில்லை.

நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகளின் கண்டனங்களுக்கு இடையில் 7 மாதங்களுக்கும் மேலாக இந்தப் போர் நீடித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x