Published : 03 Oct 2016 04:23 PM
Last Updated : 03 Oct 2016 04:23 PM

ஜப்பானிய உடற்கூறியல் விஞ்ஞானிக்கு மருத்துவ நோபல்

செல்களின் அடிப்படையான செயல்பாடுகளில் முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஜப்பான் உடற்கூறியல் ஆய்வு விஞ்ஞானி யொஷினோரி ஒசுமி என்பவருக்கு 2016-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

autophagy என்று அழைக்கப்படும் செல்களின் அடிப்படைச் செயல்பாடுகளின் ஒரு முக்கியமான அம்சத்தை கண்டுபிடித்தார் ஓசுமி.

auto என்ற கிரேக்கச் சொல்லிற்கு self என்று பொருள். phagy என்றால் to eat. எனவே autophagy என்றால் self-eating என்று பொருள்.

இந்தக் கருத்தாக்கம் 1960களில் முன்னிலை பெற்றது. அதாவது செல் தனது உள்ளடக்கங்களை சவ்வுகளுக்குள் அடக்கி தன்னையே சேதப்படுத்திக் கொண்டு பை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி இதனை lysosome என்ற ஒரு அறைபோன்ற அமைப்புக்கு மறுசுழற்சிக்கு அனுப்புகிறது. செல்லின் முக்கிய அலகுகளை இது கீழ்நிலைப்படுத்தும் பணிநிலையமாக செயல்படுகிறது. இதனைக் கண்டுபிடித்ததற்காக 1974-ம் ஆண்டு மருத்துவ நோபல் பெல்ஜிய விஞ்ஞானி கிறிஸ்டியன் டி துவே என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர்தான் self-eating என்பதைக் குறிக்கும் autophagy என்ற ஒரு சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.

லைசோசம் என்றால் புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்கள், மற்றும் கொழுப்புகள் ஆகியவற்றை சீரணிக்கும் ஒரு சிறப்புவாய்ந்த அறையாகும்.

ஆட்டோபேகி என்ற செயல்பாட்டைக் கண்டுபிடிப்பது ஆய்வாளர்களின் கண்களின் மண்ணைத் தூவி வந்தது, ஆனால் 1990-ம் ஆண்டுகளில் யொஷினோரி ஒசுமி ஈஸ்ட் மூலம் ஆட்டோபேகியை அடையாளம் காட்டும் முக்கிய மரபணுக்களை அடையாளம் கண்டார். இதே போன்ற ஒரு உயர் நுட்ப செயல்பாடு நமது செல்களிலும் உள்ளது என்பதையும் யொஷினோரி ஓசுமி நிறுவினார்.

அதாவது நம் செல்கள் அதன் உள்ளடக்கங்களை எப்படி மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறது என்பது பற்றிய நம் புரிதலில் ஒரு சட்டக-சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் ஓசுமி.

இதன் மூலம்தான் நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு புதிய வெளிச்சம் கிட்டியுள்ளது, குறிப்பாக பட்டினி கிடப்பதற்கு நம் உடல் எப்படி தன்னை தகவமைத்துக் கொள்கிறது. அதே போல் கிருமித் தொற்றிற்கு வினையாற்றுவதை எப்படி செய்கிறது என்பது பற்றிய மிக முக்கியக் கண்டுபிடிப்பு இது என்று மருத்துவ அறிஞர்கள் வட்டம் கூறுகிறது. இந்த ‘ஆட்டோபேகி’ மரபணுக்களில் ஏற்படும் உருமாற்றம், திடீர் மாற்றம் எப்படி நோய்க்கு அடிப்படையாக விளங்குகிறது என்பது கண்டுபிடிக்கக் கூடியதே என்று தெரியவருகிறது. இந்த ஆட்டோபேகி தொடர்பான செல் செயல்பாடுகள்தான் பல்வேறு நரம்பியல் மற்றும் புற்றுநோய்களுக்குக் காரணமாகிறது.

மனித செல்களுக்கு இணையான ஈஸ்ட்டின் செல்களை யொஷினோரி ஓசுமி தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். ஆனால் ஈஸ்ட்டின் செல்கள் மிகச்சிறியது என்பதால் நுண்ணோக்கியில் அவரால் அதன் உள்ளமைப்புகளை வேறு படுத்திப் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆட்டோபேகி என்ற செயல்பாடு ஈஸ்டில் இருக்கிறதா என்பதே அவருக்கு ஐயமாக இருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் அதில் ஆட்டோபேகி இருப்பதற்கான சோதனைகளை மேற்கொண்டு கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றார். 1992-ம் ஆண்டு தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

ஈஸ்ட்டில் ஆட்டோபேகி செயல்பாடுகள் இருப்பதை மனித செல்களுக்குள் கண்டுபிடிப்பது எப்படி என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. ஆனால் இதனையும் தொடர் பரிசோதனைகள் மூலம் கடந்து கண்டுபிடித்தார் ஓசுமி.

ஆட்டோபேகி என்ற செல்கள் தன் உள்ளடக்கங்களை கீழ்நிலைப்படுத்தி மறுசுழற்சி செய்யும் நடைமுறைக்கு ஏற்படும் இடையூறுதான் பார்கின்ஸன் நோய், டைப் 2 நீரிழிவு நோய் உள்ளிட்ட வயது முதிர்ந்தோருக்கான அனைத்து நோய்களுக்கும் காரணம் என்பது தெரியவர யொஷினோரி ஓசுமியின் கண்டுபிடிப்புதான் காரணம். ஆட்டோபேகி மரபணுக்களின் ஏற்படும் மாற்றங்களே மரபுசார் நோய்களுக்குக் காரணமாகிறது. இந்த ஆட்டோபேகியில் ஏற்படும் தொந்தரவுகள்தான் புற்றுநோய்க்கும் காரணம். இந்தக் கண்டுபிடிப்பை அடுத்து ஆட்டோபேகி செயல்பாட்டை நோக்கிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன.

ஆட்டோபேகி என்பது 50 ஆண்டுகளாக மருத்துவ உலகில் பேசப்பட்டு வருவதுதான். ஆனால் உடற்கூறியல் மற்றும் மருந்துகள் ஆய்வில் இது பெரிய அளவில் தாக்கம் செலுத்தியது யொஷினோரி ஓசுமியின் பாதை திறப்புக் கண்டுபிடிப்புக்குப் பிறகே என்பதால் அவருக்கு மருத்துவ நோபல் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x