Published : 05 Aug 2022 08:19 PM
Last Updated : 05 Aug 2022 08:19 PM

42 அடி நீளம்... - உலகிலேயே நீண்ட நகங்களுடன் கின்னஸில் இடம்பிடித்த பெண்: பின்புலத்தில் துயரக் கதை

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த டயனா ஆம்ஸ்ட்ராங் தனது கைகளில் 1,306 செ.மீ உயரம் கொண்ட நகங்களை வளர்த்ததற்காக உலகிலேயே நீண்ட நகங்களை கொண்டவராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.

25 ஆண்டுகளுக்கு மேலாக தனது நகங்களை வெட்டாமல் வளர்த்து கொண்டிருக்கிறார் டயனா. அவரது நகங்கள் 1,306 செ.மீ (42 அடி) நீளம் கொண்டவை. இதன் மூலம் அவர் உலகிலேயே நீளமான நகங்களை கொண்ட நபராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.

63 வயதாகும் டயனா பல வருடங்களுக்கு முன் இறந்த தன் மகளின் நினைவாக இந்த நகங்களை வளர்த்து வருவதாக தெரிவித்திருக்கிறார். இந்த நீண்ட நகங்களுடனே தனது குழந்தைகளையும், அன்றாட வேலைகளையும் டயானா செய்து வந்திருக்கிறார்.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது குறித்து டயானா கூறும்போது, “எனது மகளை 1997-ஆம் ஆண்டு நான் இழக்க நேரிட்டது. இறந்த என் மகள்தான் எனது நகங்களை பாலிஷ் செய்வார், அதற்கு வண்ணங்கள் தீட்டுவாள். ஆஸ்துமா காரணமாக என் மகள் இறந்தது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை அளித்தது. நான் சில காலம் வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் இருந்தேன். நான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நகங்களை வளர்க்கவில்லை. நான் கடந்து வந்த துன்பங்களின் வெளிபாடாகவே இந்த நகங்களை வளர்க்க ஆரம்பித்தேன். எனது பிள்ளைகள் என்னிடம் நகங்களை வெட்ட வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள். ஆனால் நான் கேட்கவில்லை.

நான் வெளியே செல்லும்போது எனது நகங்களைக் கண்டு மக்கள் பயப்படுவார்கள். சிலர் என்னிடம் புகைப்படம் எடுக்க அனுமதி கேட்பார்கள். அப்போது எல்லாம் நான் புகைப்படங்களுக்கு அனுமதி அளித்தது இல்லை ஆனால், இப்போது எடுக்கலாம்” என்றார்.

இதற்கு முன்னர், அமெரிக்காவை சேர்ந்த அயன்னா வில்லியம்ஸ் என்ற பெண்மணி உலகிலேயே நீளமான நகங்களைக் கொண்டவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். அயன்னா 733.55 செ.மீ நீளம் கொண்ட நகங்களை கொண்டிருந்தார். இந்த நிலையில், இவரது சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x