Last Updated : 17 Oct, 2016 12:38 PM

 

Published : 17 Oct 2016 12:38 PM
Last Updated : 17 Oct 2016 12:38 PM

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி: தென்கொரியா

வடகொரிய அரசு சமீபத்தில் அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) தென்கொரிய ராணுவம் தரப்பில் வெளியிட்ட தகவலில், "வடகொரியாவின் குசாங் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை தாக்கும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான இந்த சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை வடகொரியாவுக்கு தோல்வியைத் தந்திருக்கிறது. வடகொரியாவின் சோதனை குறித்து ஆய்வு செய்ய தென்கொரியாவுக்கு நேரம் தேவைப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஆரம்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலே தோல்வியடைந்ததாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சரும் கூறியிருக்கிறார்.

முன்னதாக, அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் கொரிய தீபகற்ப கடல் பகுதியில் 6 ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதித்தது.

கடந்த 2006-ம் ஆண்டில் வடகொரியா அணுகுண்டு சோதனையை நடத்தியதால் அந்த நாட்டின் மீது ஐ.நா. சபை பொருளாதாரத் தடைகளை விதித்தது. கடந்த ஜனவரி 6-ம் தேதி சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா நடத்தியது.

இதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. ஹைட்ரஜன் குண்டு, ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வடகொரியாவின் நட்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் கூட அதிருப்தி வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து வடகொரியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி உணவு, மருந்து பொருட்களைத் தவிர்த்து அந்த நாட்டுக்கு வேறு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் கொரிய தீபகற்பப் பகுதியில் 6 ஏவுகணைகளை வடகொரியா அடுத்தடுத்து ஏவியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x