Published : 21 May 2016 10:13 AM
Last Updated : 21 May 2016 10:13 AM

உலக மசாலா: நிலநடுக்க பெண்

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் மூன் ரிபாஸ். உலகில் நடைபெறும் ஒவ்வொரு நிலநடுக்கத்தையும் அவரால் உணர முடியும். அவரது கையில் ’சீஸ்மிக் சென்சார்’ என்ற சிறிய கருவியைப் பொருத்தியிருக்கிறார். தோலுக்கு அடியில் இருக்கும் இந்தக் கருவி, ஆன்லைன் சீஸ்மோ கிராஃப் உதவியுடன் இயங்குகிறது. மூன்ரிபாஸ் ஒரு நடனக் கலைஞர். அவருக்கு இயற்கையிலேயே எதையும் நுட்பமாக அறிந்துகொள்ளும் உணர்வு இருக்கிறது. அதை இன்னும் மேம்படுத்துவதற்காக சீஸ்மிக் சென்சார் கருவியை உடலுக்குள் பொருத்திக்கொண்டார். ‘‘என்னால் பூமியின் ஒவ்வொரு இயக்கத்தையும் அறிந்துகொள்ள முடியும்.

அந்த இயக்கத்தின் தன்மையை மொழிபெயர்த்துச் சொல்லவும் முடியும். பூமியின் எந்த மூலையில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் உடல் நடனமாட ஆரம்பித்துவிடும். நிலநடுக்கத்தின் தன்மையைப் பொறுத்து என் உடலும் குலுங்கும். நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, நள்ளிரவில் என் உடல் அவ்வளவு நடுங்கியது. நானே நேபாளத்தில் இருந்ததுபோல உணர்ந்தேன். பூமியில் பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகளை நானும் உணர்கிறேன், வருந்துகிறேன். இரண்டாவது இதயம் போல சீஸ்மிக் சென்சார் எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கிறது. நிலநடுக்கம் மனிதர்களுக்கு அழிவைத் தருவதால், அதை மோசமான விஷயமாக மனிதர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நானோ பூமியின் பரிணாம வளர்ச்சியாகத்தான் கருதுகிறேன். மனிதர்கள் இன்னும் பூமியை நன்கு அறிந்துகொள்ளவில்லை.

பூமியைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தால் பூமிக்கும் நல்லது, மனிதர்களுக்கும் நல்லது. பூமியை அறிந்துகொள்வதற்காகவே இன்னும் பல பரிசோதனைகளை என் உடலில் நிகழ்த்த இருக்கிறேன். ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு கண்டத்தை அறிந்துகொள்ளும் விதமாகக் கருவிகளைப் பொருத்துவதே என் அடுத்த இலக்கு. இப்படிக் கருவிகளைப் பொருத்திக்கொள்வதால் மற்ற மனிதர்களை விட வித்தியாசமாக வாழ முடியும். ஆனால் நம் இயல்பே மாறிவிடும் என்று சிலர் இதை எதிர்க்கிறார்கள். எந்த நல்ல விஷயமும் முதலில் எதிர்க்கப்பட்டு, பிறகுதான் ஏற்றுக்கொள்ளப்படும். அதனால் எனக்குக் கவலை இல்லை’’ என்கிறார் மூன் ரிபாஸ்.

நிலநடுக்கத்தை உணரும் பெண்!



ரஷ்யாவைச் சேர்ந்த கெவின் பூனைக்கு ஹைட்ரோசெபாலஸ் என்ற குறைபாடு. மூளையில் அதிகமாகத் திரவம் சுரக்கும். இதனால் கேட்கும் சக்தி பார்க்கும் சக்தி பெரும்பாலும் இழந்துவிட்டது கெவின். பிறந்து 4 வாரங்களில் கெவினின் உடல் நிலையை அறிந்த செவிலியர் டெலியா, தத்தெடுத்துக்கொண்டார். ‘‘முதலில் காது கேட்காமல், பார்வை சரியாகத் தெரியாமல் கெவின் மிகவும் கஷ்டப்பட்டது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக்கொண்டது. தன்னுடைய குறைபாட்டால் ஏகப்பட்ட அட்டகாசம் செய்யும். எல்லாவற்றையும் ரசிக்கப் பழகிக்கொண்டேன். இன்று நானும் கெவினும் மிகச் சிறந்த நண்பர்கள். 6 மாதத்துக்கு மேல் உயிருடன் இருக்காது என்று எல்லோரும் சொன்னார்கள். நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டேன்’’ என்கிறார் டெலியா.

பூனையையும் அரவணைக்கும் செவிலியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x