Published : 14 Apr 2022 08:06 AM
Last Updated : 14 Apr 2022 08:06 AM

போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த தயார்: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு

கொழும்பு: பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில், போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகளை சந்தித்து பேசத் தயார் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலை வாசி உயர்வு, உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக் கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் ஊழல் ஆட்சிதான் காரணம். எனவே, அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், அதிபர் பதவி விலமாட்டார் என இலங்கை நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த மகிந்த ராஜபக்ச தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதை போராட்டக்காரர்கள் சிலர் நிராகரித்துள்ளனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் நுவான் கூறும்போது, ‘‘நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள், பிரதமர் மகிந்த ராஜபக்சவை நிராகரித்துள்ள நிலையில், அவர் பேச்சுவார்த்தை நடத்த முன்வரக் கூடாது. அவரது ஒட்டுமொத்த குடும்பமும் ஆட்சியை விட்டு செல்ல வேண்டும்’’ என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ரசிகா என்பவர் கூறும்போது, ‘‘ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பமும் ஆட்சியை விட்டு செல்ல வேண்டும் என்பதுதான் மக்களின் குரல். அவர்களிடம் இருந்து மக்களின் பணத்தை மீட்க வேண்டும். அவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்’’ என ஆவேசமாக கூறினார். இதனிடையே, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்க, 10 மில்லியன் அமெரிக்க டாலரை உலக வங்கி வழங்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் நிதி கேட்டு உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் சுகாதாரத்துறை அமைச்சகம் பேச்சு நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x