Published : 10 Apr 2022 05:22 AM
Last Updated : 10 Apr 2022 05:22 AM

நாராயணமூர்த்தி மகள் வரி விவகாரத்தால் கணவர் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராவதில் சிக்கல்

லண்டன்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி மகள் வரி விவகாரத்தால் அவரது கணவர் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.

பிரிட்டனின் நிதித்துறை அமைச்சராக ரிஷி சுனக் உள்ளார். அந்நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு ரிஷிக்கு பிரகாசமாக உள்ளதாக கருதப்படுகிறது. இவர் இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மகள் அக்சதா மூர்த்தியை (42) திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், சண்டே டைம்ஸ் பத்திரிகை அண்மையில் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதன்படி, பிரிட்டன் ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ.3,500 கோடி. அக்சதா மூர்த்தியின் வசம் உள்ள இன்போசிஸ் பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி ஆகும். இதைத் தவிர, சொந்த நிறுவனங்களில் இருந்து அக்சதா மூர்த்தி கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்.

பிரிட்டனில் குடியுரிமை பெறாதவர்கள் தங்கள் வெளிநாட்டு வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற சட்டம் உள்ளது. இதன்படி, பிரிட்டன் குடியுரிமை பெறாததால் அக்சதா மூர்த்தி வரி செலுத்தவில்லை. ஆனால், இவர் வரி செலுத்தவில்லை எனக் கூறி எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 20 மில்லியன் யூரோ வரை அவர் வரி கட்டாமல் அரசை ஏமாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் ரிஷி, தனது நிதித்துறை அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவிக்கு வரி விலக்கு பெற்றுக் கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதனால் அரசியல் ரீதியாக அவரும், அவரது கணவருமான ரிஷி சுனக்கும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ரிஷி பிரதமராவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து பிரிட்டன் அமைச்சர் ரிஷி சுனக் கூறும்போது, "என்னை விமர்சிப்பவர்கள், எனது மனைவிக்கு எதிராக பொய் பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளனர். அக்சதா என்னை திருமணம் செய்து கொண்டதால் அவளது நாட்டுடனான உறவை துண்டிக்குமாறு கூறுவது நியாயமானதாகவோ அல்லது சரியானதாகவோ இருக்காது. இங்கிலாந்தில் அவர் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவிற்கும் அவர் இங்கிலாந்து நாட்டுக்கு வரி செலுத்துகிறார்" என்றார்.

ரிஷி சுனக்குக்கு ஒரு மாதத்துக்கு முன்பு பிரிட்டனின் அடுத்த பிரதமராக வருவதற்கு 35 சதவீத வாய்ப்பு இருந்தது. பிரதமர் பதவிக்கு அடுத்த போட்டியாளரை விட 3 மடங்கு அதிக வாய்ப்புகள் ரிஷிக்கு இருந்தன. அவரது மனைவியின் வரி சர்ச்சைக்குப் பிறகு, சுனக் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு 12 சதவீதமாகக் ஆகக்குறைந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x