Published : 08 Apr 2022 01:13 PM
Last Updated : 08 Apr 2022 01:13 PM

கொடூரக் கொலைகளை செய்ய அஞ்சாத செச்சன் படைகள்: உக்ரைனில் களமிறக்கப்பட்டுள்ள புதினின் நம்பிக்கைக்குரிய காடிரோவைட்ஸ்

காடிரோவைட்ஸ் படையினர்

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள புதினின் நம்பிகைக்குரிய செச்சன்ய போர் வீரர்கள் பற்றிய செய்தி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான் ரஷ்யப் போர் ஒன்றரை மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யப் படைகள் வடக்குப் பகுதியிலிருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளன. கிழக்கில் டான்பாஸ் பகுதிகள் ரஷ்யா படைகளைக் குவித்துள்ளது. இந்நிலையில், புக்கா நகரில் மீட்புப் பணியை தொடங்கிய உக்ரைன் அங்கு சாலைகளில் குவிந்து கிடந்த சடலங்களைக் கண்டு அதிர்ந்துபோனது. இதன் எதிரொலியாகத் தான் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கொடூர கொலைகளை செய்வது புதினின் நம்பிக்கைக்குரிய 'காடிரோவைட்ஸ் படைகள்' என்ற தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த காடிரோவைட்ஸ்? புதினின் ஆதரவாளரும் செச்சன்ய குடியரசின் தலைவருமானவர் ரம்ஸான் காடிரோவ். இவரது படைகள் உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதனை உறுத்திப்படுத்திய காடிரோவ், 'கீவ் நகரின் நாசிக்களை' எதிர்த்துப் போராடுகிறோம் என்று வெளிப்படையாகவே கூறி வந்தார். அண்மையில் உக்ரைனின் மரியுபோல் நகரில் அவர் தனது படைகளுடன் புகைப்படம் எடுத்து அது இணையத்தில் பகிர்ந்தார். ரம்ஸாப் காடிரோவ் அவரது சகாக்கள் 30 பேரும் இருந்த அந்தப் புகைப்படம் உக்ரைன் மக்களை பீதியடையச் செய்தது. செச்சன்யப் படைகள் அதன் கொடூரத்துக்குப் பெயர் போனவை. அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமலும் படுகொலை செய்பவை என்று அறியப்பட்டவை. சிரிய நாட்டில் நடந்த போரில் இந்தப் படைகள் பல கொடூரங்களில் ஈடுபட்டதாக வரலாறு உண்டு.

ரம்ஸான் காடிரோவ்

45 வயதான ரம்ஸான் காடிரோவ், செச்சன்ய விடுதலைப் போராளியின் மகன். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் ரஷ்யாவை கண்மூடித்தனமாக ஆதரிக்கத் தொடங்கிவிட்டார். உக்ரைனுக்கு நேரடியாக சென்ற தான் ரஷ்ய வீரரை தாக்கிய உக்ரைன் வீரருக்கு தனது கைகளாலேயே தண்டனை கொடுத்ததாக டெலிகிராம் ஆப்பில் கூறி பீதியைக் கிளப்பினார். என்ன தண்டனை என்று விவரிக்கவில்லை. ஆனால் அவ்வப்போது தனது செச்சன்யப் படைகள் நிகழ்த்தும் தாக்குதல்களை டெலிகிராமில் பகிர்கிறார்.

உக்ரைன் போரில் ரஷ்யா செச்சன்யப் படைகளை ஈடுபடுத்துவதாக அறிவித்த நாளில் இருந்தே உக்ரைன் மக்கள் பீதியில் உள்ளனர். 1000க்கும் மேற்பட்ட செச்சன்ய வீரர்கள் உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் தான் புக்கா படுகொலை நடந்ததாக கூறப்படுகிறது. மரியுபோலில், ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி அண்மையில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. மரியுபோலில் நடந்த மனித உரிமை மீறல்களை மறைக்கவே அதை ரஷ்யா தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் ஜெலன்ஸ்கி கூறினார். இப்போது புக்கா நகரைக் காட்டிலும் போரோடியாங்கா நகரில் இன்னும் அதிகமாக மனித உடல்கள் இருப்பதாக உக்ரைன் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x