Published : 22 Mar 2022 09:29 PM
Last Updated : 22 Mar 2022 09:29 PM

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

அலெக்ஸி நவல்னி (இடது), புதின் (வலது)

மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்காக 9 ஆண்டுகள் கடுகாவல் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013-ம் ஆண்டு அலெக்ஸி மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் கடந்த வருடம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தனது தண்டனையை எதிர்த்து கடந்த சில மாதமாகவே அலெக்ஸி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

இந்த நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றங்களுக்காக அலெக்ஸி நவல்னி 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்ய அரசியலில் புதினுக்கு சவாலாக கருதப்பட்ட அலெக்ஸி நவல்னிக்கு அடுத்தடுத்து வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனைகள் அவரது ஆதரவாளர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த அலெக்ஸி நவால்னி? - ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி. அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருந்தாலும் அலெக்ஸி நவல்னி பொதுவெளியில் தொடர்ந்து புதின் அரசை விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டிருப்பதை ஜெர்மனி அரசு உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டதில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது

இந்த நிலையில், சிகிச்சைக்குப் பின் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x