Published : 21 Mar 2022 12:52 PM
Last Updated : 21 Mar 2022 12:52 PM

கோழி இறைச்சி ரூ.1,000, டீ ரூ.100, முட்டை ரூ.36, உளுந்த வடை ரூ.80: மீண்டும் உயர்ந்த கேஸ் விலையால் தவிக்கும் இலங்கை மக்கள்

இலங்கையில் அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் விலை: பிரதிநிதித்துவப் படம்

கொழும்பு: கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கையில் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.1000-ஆகவும், தேனீர் ஒரு கப் ரூ. 100 ஆகவும், ஒரு முட்டை விலை ரூ.36 ஆகவும் விற்கப்படுகிறது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது.

நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

இலங்கை கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தப்ய ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 320 ஆக உயர்ந்து விட்டது. இதனால் எந்த பொருளை வாங்க வேண்டும் என்றாலும் மிக அதிகமான விலை கொடுத்து தான் வாங்க வேண்டிய சூழலில் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பெட்ரோல்- டீசல் விலையும் கட்டுப்பாடின்றி உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு 12.5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை 4190 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சமையல் எரிவாயுவுக்கு பெரும் பற்றாக்குறையும் நிலவுகிறது.

இதனால் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளன. பேக்கரி மற்றும் இனிப்பங்களில் திண்பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு சுவீட்டின் விலை 90 ரூபாயாக விற்கிறது. உளுந்தவடை ஒன்றின் விலை 80 ரூபாயாக விற்பனைய செய்யப்படுகிறது. கொழும்புவில் சிறிய ஓட்டல்களில் கூட சைவ சாப்பாடின் விலை 240 ரூபாயாக உள்ளது. சாலையோர கடைகளில் பொறித்த ஒரு மீன் விலை 250 ரூபாயாக உள்ளது.

உணவு தயாரிக்க தேவைப்படும் பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதால் உணவின் விலையும் அதிகரித்துள்ளது. அரிசி விலை 100, சீரகம் ஒரு கிலோ சீரகம் 1899, பெரும் சீரகம் ரூ. 1500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் ரூ.400, முட்டை ஒன்றின் விலை ரூ,36,
கோழி இறைச்சி விலை ரூ.1000 என்ற அளவில் விற்கப்படுகிறது.

மைதா மாவு ஒரு மூடை ரூ.9250, சர்க்கரை ரூ.8000 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பால் பவுடர் ரூ.1945-க்கு விற்கப்படுகிறது. ஒரு கப் டீ 100 ரூபாய்க்கு விற்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கடைகளில் பால், டீ விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வருவாயை அதிகரிக்க பல்வேறு பொருட்கள் மீதான வரியையும் இலங்கை அரசு உயர்த்தி வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களுக்கு இறக்குமதி வரியை இலங்கை அரசு அண்மையில் 50 சதவீதம் உயர்த்தியது. இதனால் இறக்குமதியாகும் பழங்கள் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கிரேப்ஸ் ரூ.1500-க்கும். ஒரே ஒரு ஆப்பிள் விலை ரூ.150க்கும் விற்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி பேப்பர் தட்டுப்பாடு காரணமாக மாணவ- மாணவியரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பேப்பர் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.தேர்வுகள் நெருங்கும் வேலையில் கேள்வித்தாள் கூட அச்சடித்து வழங்க முடியாத நிலையில் இலங்கை உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x