Last Updated : 03 Mar, 2022 12:42 PM

 

Published : 03 Mar 2022 12:42 PM
Last Updated : 03 Mar 2022 12:42 PM

'நரக வாழ்க்கை' - கார்கிவில் கடும் தாக்குதல், குண்டு மழையில் கீவ்... - அண்டை நாடுகளில் 10 லட்சம் பேர் தஞ்சம்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா இன்று 8-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கே இயல்பு நிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தெருக்களில் ரஷ்ய, உக்ரைன் படைகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உள்ளது. தலைநகர் கீவ் மீதும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. காலையில் இருந்தே கீவ் நகரில் வெடிகுண்டுச் சத்தம் விண்ணைப் பிளப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய நகரங்களைப் பறிகொடுக்கும் உக்ரைன்: ஏற்கெனவே கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. உக்ரைன் தரப்பும் தாங்கள் மிகப் பெரிய நகரங்களை ஒன்றன்பின் ஒன்றாக ரஷ்யப் படைகளிடம் இழந்துள்ளதாக உறுதி செய்துள்ளது. பொதுமக்களில் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் உயிர்பிழைத்தால் போதுமென உக்ரைன் மக்கள் 10 லட்சம் பேர் இதுவரை அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தப் ரஷ்ய படை வீரர்கள் 489 பேர் பலியானதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை 6,000 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரில் காயமடையும் ரஷ்ய வீரர்கள் சிகிச்சைக்காக பெலாரஸ் செல்கின்றனர்.

துறைமுகம் சுற்றிவளைப்பு: பெரிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திவரும் சூழலில், துறைமுக நகரமான மரியுபோல் நகரமும் ரஷ்யப் படைகளின் பிடியில் வந்தது. அசோவ் கடற்கரையில் உள்ள இந்த நகரம் மிகவும் முக்கியமானது. இதுவரை கிழக்கில் இருந்து நகரங்களைக் குறிவைத்த ரஷ்யா தற்போது தலைநகர் கீவின் மேற்கு மற்றும் தெற்கில் உள்ள நகரங்களையும் தாக்கத் தொடங்கியுள்ளது.

அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை... - இந்நிலையில், ரஷ்யா அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது. முந்தைய பேச்சுவார்த்தை கோமெல் நகரில் நடந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை பெலாரஸ் எல்லையில் வேறொரு இடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நரகத்தில் வாழிறோம்... - உக்ரைன் மக்கள் வேதனை: போர் உச்சம் தொட்டுள்ள நிலையில், நரகத்தில் வாழ்வது போன்ற தோற்றம் உருவாகியுள்ளதாக உக்ரைன் மக்கள் கூறுகின்றனர். கடந்த 24 ஆம் தேதி முதல் கீவ் நகரின் மகப்பேறு மருத்துவமனையில் உள்ள நிறைமாத கர்ப்பிணி, ’எனது அச்சத்தைப் போக்க புத்தகங்களை வாசிக்க முயல்கிறேன். இருப்பினும் எந்த நேரம் குண்டு விழும் என்ற அச்சத்தை மாற்றவே முடியவில்லை. மருத்துவர்கள் என்னை அழுத்தத்துக்கு உள்ளாக வேண்டாம் என்று ஆசுவாசப்படுத்தினாலும் என்னால் முடியவில்லை’ என்று அந்த இளம் பெண் அலீனா ஷிங்கார் கூறினார்.

இந்தியா புறக்கணிப்பு; அமெரிக்கா தடைக்கு கணக்கு... - மூன்றாவது முறையாக ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.நேற்று புதன்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடந்தது. 193 உறுப்பு நாடுகள் உள்ள நிலையில் 141 நாடுகள் ரஷ்ய தாக்குதலைக் கண்டித்து வாக்களித்தன. ரஷ்யா உடனடியாக எந்தவித நிபந்தனையுமின்றி முற்றிலுமாக தாக்குதலை நிறுத்தி உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்த நாடுகள் வலியுறுத்தின. இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக, இந்தத் தீர்மானத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க வைக்க அமெரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இந்நிலையில், இந்தியா மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவிலிருந்து வெளியேறும் இந்திய மாணவர்கள்: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் இன்னும் முழுமையாக மீட்கப்படாத சூழலில் ரஷ்யாவில் உள இந்திய மாணவர்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் இந்திய மாணவர்களுக்கு நேர்ந்த நிலைமையை சந்திக்க விரும்பவில்லை எனக் கூறி அவர்கள் வெளியேறி வருகின்றனர். ரஷ்ய விமானங்களுக்கு பல்வேறு நாடுகளும் தங்களின் வான் எல்லையை மூடியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் கிளம்பிவருகின்றனர்.

தெர்மோபேரிக் குண்டுகள் தயார்: இதற்கிடையில், உக்ரைன் உடனான போரில் க்ளஸ்டர் குண்டுகள், தெர்மோபேரிக் ஆயுதங்கள் என தன்னிடம் உள்ள அதிநவீன மிக மோசமான நாசகர விளைவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களையும் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தெர்மோபேரிக் ஆயுதங்கள் வளிமண்டலத்தை சூடாக்கி அங்குள்ள காற்றை கொதிநிலைக்குக் கொண்டு செல்லும். இதனால் தெர்மோபேரிக் ஆயுதத்தின் இலக்கின் கீழ் உள்ள அனைத்து எரிந்துவிடும். இந்த வகை ஆயுதம் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. இதன் தாக்கம் இலக்கைச் சுற்றி 5 முதல் 6 கி.மீ எல்லைக்குள் இருக்கும். அந்த எல்லைக்குள், பதுங்கு குழிகள், சுரங்கங்களில் இருப்போரைக் கூட இந்த குண்டு விட்டுவைக்காதாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x