Last Updated : 02 Mar, 2022 03:53 PM

 

Published : 02 Mar 2022 03:53 PM
Last Updated : 02 Mar 2022 03:53 PM

இந்த 7 நாட்கள் | கீவ், கார்கிவ், கெர்சன்... ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் உக்ரைன் நகரங்கள் - எங்கே செல்லும் இந்தப் போர்ப் பாதை?

சீறிப் பாயும் ரஷ்ய ஏவுகணை

கீவ்: பிப்ரவரி 24, 2022, உலகிற்கு ஒரு சாதாரண நாளாக அமையவில்லை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். இன்றுடன் போர் தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ரஷ்ய தரப்பில் 6,000 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர் என்கிறது உக்ரைன். உக்ரைன் தரப்பில் 14 குழந்தைகள் உட்பட 530-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

முதலில் ராணுவ, விமானப்படை தளங்கள், அரசுக் கட்டிடங்கள், அலுவலகங்கள் என்று தாக்கிவந்த ரஷ்யப் படைகள் தற்போது மகப்பேறு மருத்துவமனை வரை தனது போரின் கோரப் பிடியை இறுக்கியுள்ளது. பிப்ரவரி 24 முதல் இன்று வரை உக்ரைன் மீதான தாக்குதல் குறித்த விரைவுப் பார்வை இதோ...

பிப். 24: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பு ஒரு மிகப் பெரிய எச்சரிக்கையுடன் வெளியானது. அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய புதின், "உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடுகிறேன். இதன் நோக்கம், கடந்த 8 ஆண்டுகளாக உக்ரைன் ஆட்சியாளர்களால் சில மக்கள் இன அழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் துயரத்துக்கு முடிவு காண தாக்குதலுக்கு உத்தரவிடுகிறேன். உக்ரைனில் இருந்து நேட்டோ ஆதாரவுப் படைகள் பின்வாங்க வேண்டும். உக்ரைன் நாஜிக்களின் கூடாரமாகியுள்ளது. உக்ரைன் வீரர்களே, உங்களின் ஆயுதங்களை கீழே போடுங்கள். ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் யாராவது தலையிட நினைத்தாலோ, எங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறினாலோ நாங்கள் உடனடியாக தகுந்த பதிலடி கொடுப்போம். அதன் விளைவுகள் வரலாறு இதுவரை சந்தித்திராததாக இருக்கும். உக்ரைனை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் உக்ரைனை ஆக்கிரமிக்க மாட்டோம். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறோம்" எனப் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சில், வரலாறு காணாத விளைவு என்ற புதினின் எச்சரிக்கை மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்தியது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால், தகுந்த பதிலடி கொடுப்போம் என்று கூறிய அமெரிக்கா, நேட்டோ உறுப்பு நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எல்லாம் 'கப் சிப்' என அமைதி காத்தன. வெறும் கண்டனங்களோடு தங்களின் எதிர்வினையை முதல் நாளில் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டன.

ரஷ்ய அதிபரின் அறிவிப்பி வெளியான சில நிமிடங்களிலேயே தாக்குதலை படைகள் தொடங்கின. சில மணி நேரங்களிலேயே உக்ரைனின் வான்வழித் தாக்குதல் கட்டமைப்பை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக ரஷ்யா அறிவித்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோற்கடித்தது. வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்ட இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் திரும்புமாறு கூறி நடுநிலை வகித்தது. ஜி7 நாடுகள், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.

பிப். 25: இரண்டாம் நாளான பிப்ரவரி 25-ல் ரஷ்யா உக்ரைன் நகரங்களுக்குள் ஊடுருவியிருந்தது. வான்வழித் தாக்குதல், தரை வழித் தாக்குதல் என எல்லா உத்திகளையும் களத்தில் இறக்கியதோ மும்முனைத் தாக்குதலையும் நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து 65 மைல் தொலைவில் உள்ள பிரிப்யாட் ஆற்றின் கரைப் பகுதியில் உள்ள செர்னோபில் அணு உலையை ரஷ்யப் படைகள் கட்டுக்குள் கொண்டுவந்தன. இந்தச் சூழலில் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் "எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம்" என்று கூறியிருந்தார். இதற்கிடையில், பொருளாதாரத் தடைகளை மட்டும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து அறிவித்து வந்தன.

அடுத்த சில மணி நேரங்களிலேயே அதிபர் இன்னொரு வீடியோ வாயிலாக "எதிரியின் (ரஷ்யாவின்) முதல் இலக்கு நான் தான். இரண்டாவது இலக்கு எனது குடும்பம். நான் இன்னும் தலைநகர் கீவில் தான் இருக்கிறேன். என் குடும்பம் இன்னும் உக்ரைனில் தான் உள்ளது. ரஷ்யா என்னை வீழ்த்தி அரசியல் ரீதியாக உக்ரைனை ஆக்கிரமித்து ஆட்டுவிக்க நினைக்கிறது" என்று கூறினார். ஜெலன்ஸ்கியின் உருக்கமான வீடியோக்கள் உலகம் முழுவதும் உக்ரைன்க்கு ஆதரவை அதிகரித்தது. ரஷ்யா, அமெரிக்கா, லண்டன், தென் கொரியா, ஸ்விட்சர்லாந்து, ஜப்பான் எனப் பலநாடுகளில் உக்ரைனுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடந்த போராட்டத்தில் ரஷ்யர்கள் போர் வேண்டாம்; எங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்று முழங்கினர். போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். கூடவே ரஷ்யாவின் கோரத் தாக்குதலைப் பார்த்து ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கூட போரை நிறுத்த கோரிக்கை விடுத்தது. உக்ரைன் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்ற ரஷ்ய அறிவிப்புடன் இரண்டாம் நாள் நிறைவடைந்தது.

உக்ரைனின் கார்கிவ் நகரில், ரஷ்ய தாக்குதலில் தீக்கிரையான காவல்துறை தலைமையகம்

பிப். 26: மூன்றாவது நாளில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு ஒரு உத்திரவாதம் அளித்தார். உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பிரதமர் மோடியிடம் கூறினார். இரண்டாம் நாள் இரவு முழுவதும் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தின. கிழக்குப் பகுதியில் தாக்குதல் அதிகமாக இருக்க மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்தே பிற நாடுகளின் எல்லைகளை அடைந்தனர். இரவோடு இரவாக ஒரு செல்ஃபி வீடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "தேசத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்திட நாங்கள் இங்கே தான் இருக்கிறோம். எங்கள் ராணுவம் இங்கு தான் இருக்கிறது. குடிமக்கள் இங்குதான் இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இங்கு இருக்கிறோம். இப்படித்தான் இருப்போம்" என்று கூறியிருந்தார்.

உக்ரைன் தாக்குதல் உக்கிரமடைந்த சூழலில், உக்ரைனுக்கு ஸ்வீடன் படைகளை அனுப்பி உதவுவதாகக் கூறியது. அமெரிக்கா உதவிகள் பற்றி பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தது. உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி போப் பிரான்ஸிஸ் வாடிகனில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு நேரில் சென்றார். போப் ஒருவர் இதுபோன்று தூதரக அலுவலகத்துக்கே சென்று கோரிக்கை வைத்தது உலகளவில் கவனம் ஈர்த்தது. இதற்கிடையில் பேச்சுவார்த்தைக்கு தோதான இடமும், நேரமும் குறித்து ரஷ்ய தரப்பும், உக்ரைன் தரப்பும் ஆலோசித்து வருவதாக அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் செர்கெய் நிக்கிஃபோரோவ் கூறினார்.

ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால், 'தலைநகர் கீவ் நகரிலிருந்து வெளியேறுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்க, ஜெலன்ஸ்கியோ "சண்டை இங்கேதான் நடக்கிறது. எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல" என்று தெரிவித்தார். இதற்கிடையில் இந்தியர்களை 200-க்கும் மேற்பட்டோரை மீட்டுக் கொண்டு முதல் விமானம் உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவிலிருந்து புறப்பட்டது. மூன்று நாட்கள் போர் முடிவில் பொதுமக்களில் 35 குழந்தைகள் உள்பட 198 பேர் பலியானதாக உக்ரைன் அறிவித்தது. 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியது.

பிப்.27: முந்தைய இரவு முழுவதும் கொடூரத் தாக்குதலை நடத்திய ரஷ்யப் படைகள் உக்ரைனின் எரிவாயுக் குழாய்களைக் குறிவைத்து தாக்கின. கீவ் நகருக்கு அருகில் உள்ள வாசில்கிவ் நகரில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையத்தையும் ரஷ்யப் படைகள் தாக்கியுள்ளன. போர் தொடங்கிய முதல் தாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துவந்தார். ரஷ்யாவுக்கு அனைவரும் அஞ்சுவதாகக் கூறியிருந்தார். பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உதவிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார். இந்நிலையில், 4வது நாளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 350 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை அனுப்புவதாகக் கூறினார். ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் ராணுவ உதவி அளிக்க முன்வந்தன. போலந்து நாடு உக்ரைனில் இருந்து வருபவர்களுக்கு தாராளமாக தஞ்சம் கொடுத்தது. இதுமட்டுமல்லாது, சர்வதேச பணப் பரிவர்த்தனையில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கை ஐரோப்பிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது. ஸ்விஃப்ட் சேவையில் இருந்து ரஷ்யாவின் வங்கிகளை நீக்கி அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன், கனடா, இத்தாலி ஆகிய நாடுகள் உத்தரவிட்டன.

அதேவேளையில், பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறினாலும், எந்த இடத்தில் என்பதில் ஜெலன்ஸ்கி பிடிவாதம் காட்டினார். பெலாரஸ், ரஷ்யாவின் உடந்தை நாடு. அங்கு பேச்சுவார்த்தை நடத்த முடியாது. நாங்கள் ஒரு சர்வதேசப் படையை உருவாக்கவுள்ளோம் என்று கூறினார். இந்த அறிக்கை பேச்சுவார்த்தைக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. 4-ஆம் நாள் முடிவில் ரஷ்ய அதிபர் தனது அணு ஆயுதப் படைகளை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

பிப். 28: ஐ.நா. பொதுச்சபை அவசரக் கூட்டத்திற்கான வாக்களிப்பைப் புறக்கணித்த இந்தியா மாணவர்களின் நலனே முக்கியம் எனக் கூறியது. இங்கே தலைநகர் டெல்லியில், பிரதமர் மோடி, மாணவர்கள் மீட்பு குறித்து அவசர ஆலோசனை நடத்தி ’ஆபரேஷன் கங்கா’வை அறிவித்தார். முந்தைய நாள் ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டது. 5 நாட்களில், ரஷ்யப் படைகளின் தாக்குதலால் உக்ரைனின் அப்பாவி பொதுமக்களில் 352 பேர் பலியாகியதாக அறிவிக்கப்பட்டது. மேலும், போலந்து, ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு 4 லட்சம் பேர், பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் இடம்பெயர்ந்ததாகக் கூறப்பட்டது.

பிப்.28: இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு பெலாரஸின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை தொடங்கியது. அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கை கவனம் பெற்றது.

"ரஷ்யப் படையினரே... உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பின்வாங்குங்கள். நீங்கள் உங்கள் கமாண்டர்கள் சொல்வதை நம்பாதீர்கள். உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். எங்களின் இலக்கு ஐரோப்பாவில் இருக்க வேண்டும். சம வாய்ப்புடன், சம அந்தஸ்துடன் இருக்க வேண்டும். அது நியாயமான இலக்கு. அடையக் கூடிய இலக்கு என்றே நினைக்கிறேன். கடந்த 4 நாட்களில் மாஸ்கோ படைகள் 16 குழந்தைகளைக் கொன்றது. 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர். நாங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். இது ஒழுக்க நெறி ரீதியாக தவறாக இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு பாதுகாப்பை கருதும்போது மிகவும் உபயோகரமானதாக இருக்கும். போர் முனையில் சண்டையிட விருப்பமுள்ள, திறனுள்ள, அனுபவமுள்ள கைதிகளை விடுவிக்க உள்ளோம். இந்தச் சூழலில் இங்கு அனைவருமே போர வீரர்கள் தான். இந்தப் போரில் எல்லோரும் வெற்றி பெறுவோம்" என்று கூறியிருந்தார்.

போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ரஷ்ய தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டது. ரஷ்யா உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை கோரி விண்ணப்பத்தது. இதற்கிடையில், உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டு 6-வது விமானமும் இந்தியா வந்தடைந்தது.

மார்ச் 1: உக்ரைன்-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் 6-வது நாளாக நேற்று மார்ச் 1 ஆம் தேதியும் தாக்குதல் நடைபெற்றது. நேற்றைய தாக்குதலில் ரஷ்யா கொத்து குண்டுகளைப் பயன்படுத்தினர். கார்கிவ் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் அங்கு ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் சிக்கி இந்திய மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார். இது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

ரஷ்ய ராணுவ நடவடிக்கை 6-வது நாளாக தொடர்ந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் உரை நிகழ்த்தினார். தனது உரையில், "ஐரோப்பிய ஒன்றியம் எங்களுடன் துணை நிற்பதை நிரூபிக்க வேண்டும். எங்களை தனித்துவிட்டு போகமாட்டீர்கள் என நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள். அப்போது தான் எங்களை சுற்றியுள்ள இருளைக் கடந்து நாங்கள் மரணத்தை வெல்ல முடியும். ஐரோப்பிய ஒன்றியம் எங்களுடன் மிகவும் வலுவாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறினார். ஜெலென்ஸ்கியின் இந்த உரைக்கு பின் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். நேற்றிரவு கீவ், கார்கிவ், கெர்சன் எனப் பல நகரங்களும் படுபயங்கர தாக்குதலுக்கு உள்ளானது.

மார்ச் 2: இன்று ரஷ்யா தாக்குதலைத் தொடங்கு முழுமையாக ஒரு வாரமாகிவிட்டது. இதுவரை ராணுவ, விமானப்படை தளங்கள், அரசுக் கட்டிடங்கள், அலுவலகங்கள் என்று தாக்கிவந்த ரஷ்யப் படைகள் தற்போது மகப்பேறு மருத்துவமனை வரை தனது போரின் கோரப் பிடியை இறுக்கியுள்ளது. அமெரிக்க வான்வழியைப் பயன்படுத்த ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதினை சர்வாதிகாரி என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் ரஷ்யாவின் கெர்சன் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் பைடனிடம் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர், உடனடிய ரஷ்ய படையெடுப்பை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் இன்று அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதுவரை உக்ரைனிலிருந்து 7 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர்.

இன்று கூட அதிபர் ஜெலன்ஸ்கி தனது கொள்கையில் உறுதியுடன் இருக்கிறார். உக்ரைன் மீது தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரட்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுமா இல்லை இழுபறி நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x