Published : 31 Dec 2021 05:05 PM
Last Updated : 31 Dec 2021 05:05 PM

உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்தில் பிறந்தது புத்தாண்டு: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஆக்லாந்து: உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டான 2022-ம் ஆண்டு பிறந்தது. மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாகப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.

உலகின் நேரக் கணக்கின்படி பசிபிங் தீவில் உள்ள டோங்கா, சமோவா, கிரிபாட்டி, கிறிஸ்துமஸ் தீவுகளில் புத்தாண்டு பிறக்கும். ஆனால், நியூசிலாந்தில்தான் முதல் புத்தாண்டு பிறப்பது கணக்கில் எடுக்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு, நியூசிலாந்தில் இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்துள்ளது.

உலகிலேயே முதலாவதாகப் புத்தாண்டு கொண்டாடப்படுவது நியூசிலாந்தில்தான். இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் ஏழரை மணிநேரம். இந்த இடைவெளி இருப்பதால், நமக்கு மாலை 4.30 மணி ஆகும்போது அவர்களுக்கு நள்ளிரவு 12 மணி தொடங்கிவிடும்.

நியூஸிலாந்தில் புத்தாண்டு பிறந்ததையடுத்து ஆக்லாந்து நகரில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளும் நடந்தன.புத்தாண்டு பிறந்ததையொட்டி, நியூசிலாந்தின் ஆக்லாந்து, கிறிஸ்ட்சர்ச் வெலிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நியூஸிலாந்தில் கரோனா வைரஸ் பரவல் இருந்தபோதிலும் அதற்கான கட்டுப்பாடுகளை புத்தாண்டுக்கு மட்டும் நியூஸிலாந்து அரசு தளர்த்தியுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடவும், வாழ்த்துக்களைப் பரிமாறவும் அரசு அனுமதித்துள்ளது. அதேநேரம், தனிமனித விலகலைக் கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தியுள்ளது.

ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், பார்களில் புத்தாண்டைக் கொண்டாடச் சிறப்பு நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு பிறந்ததையொட்டி மக்கள் உற்சாகமாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

புத்தாண்டு பிறந்தவுடன் ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவரில் மக்கள், வானவேடிக்கை வெடித்துக் கொண்டாடினர். லேசர் நிகழ்ச்சிகள் மூலம் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
அடுத்த சில மணிநேரங்களில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளதால், அங்குள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x