Published : 09 Mar 2016 10:55 AM
Last Updated : 09 Mar 2016 10:55 AM

உலக மசாலா: நாய்க்குக் கவசம் அளித்த வள்ளல்!

கலிபோர்னியாவைச் சேர்ந்த பால், பமீலா மோட் இருவரும் செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்கள். இந்த நாயை கயோடி என்ற நரி வகையை ஒத்த விலங்குகள் அடிக்கடி காயப்படுத்தி விடுகின்றன. அதனால் மிகவும் கவலை அடைந்த பால் ஒரு புது வழியைக் கண்டுபிடித்தார். நாயின் முதுகைச் சுற்றிலும் ஒரு பிளாஸ்டிக் கவசத்தை உருவாக்கினார்.

அதில் பிளாஸ்டிக் குச்சிகளையும் உலோகத்தால் ஆன கூர்முனைகளையும் இணைத்தார். இந்தக் கவசத்தை நாயின் முதுகில் கட்டினார். தூரத்தில் இருந்து வரும் எந்த விலங்கும் நாயின் உருவத்தைக் கண்டு திகைக்கும். அருகில் வரவே அஞ்சும். அதையும் மீறி நாய் மீது பாய்ந்தால் பிளாஸ்டிக் குச்சிகள் குத்தும். விலங்குகள் நாயை விட்டு அகன்று விடும். ’’எங்கள் நாயைப் பார்த்த நண்பர்கள் தங்கள் நாய்களுக்கும் இந்தக் கவசத்தை உருவாக்கித் தருமாறு கேட்டனர். ’கயோடி வெஸ்ட்’ என்ற பெயரில் ஒரு புதிய தொழிலையே ஆரம்பித்துவிட்டோம்.

அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தற்காப்பு முட்களை இணைக்கிறோம். அதற்கேற்ப விலையையும் நிர்ணயிக்கிறோம். நாயை நேசிக்கும் அனைவரும் இந்தக் கவசத்தை வாங்கி விடுவதால், தொழில் சிறப்பாகச் செல்கிறது’’ என்கிறார் பால்.

நாய்க்குக் கவசம் அளித்த வள்ளல் வாழ்க!

கென்ய கிராமம் ஒன்றில் புதைகுழிக்குள் தவறி விழுந்துவிட்டது யானை. குழியில் இருந்து வெளியே வருவதற்கு எவ்வளவோ போராடியது. ஆனால் முடியவில்லை. யானையின் அலறலைக் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். தாகத்தால் தவித்த யானைக்கு 100 லிட்டர் தண்ணீர் வரை கொடுத்தனர். வனத்துறையினர் வந்து, நீண்ட நேரம் போராடி, யானையை வெளியே இழுத்து வந்தனர். சிறு காயங்களுடன் யானை உயிர் பிழைத்தது.

ஓர் உயிரைக் காப்பாற்றிய கிராமத்துக்கு நன்றி!

அமெரிக்காவில் உள்ள ஹெண்டர்சன் நகரில் ’Bad Owl’ என்ற பெயரில் ஒரு காபி ஷாப் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இங்கே வரிசையில் காத்திருந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள். காரணம், பேட் அவுல் காபி ஷாப், ஹாரி பாட்டர் தீமில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 2 வாரங்களிலேயே உலகம் முழுவதும் இந்த காபி ஷாப் பிரபலமாகிவிட்டது. ’’நான் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் வேகமாக இங்கே வந்தேன். ஒரு மணி நேரம் வரிசையில் நின்ற பிறகே என்னால் காபி ஷாப் உள்ளே நுழைய முடிந்தது. ஆனாலும் எனக்கு அதில் வருத்தம் இல்லை. நான் ஹாரி பாட்டரின் தீவிர ரசிகை’’ என்கிறார் ஷெல்பி.

பல ஆண்டுகளுக்கு ஹாரி பாட்டரை அசைக்க முடியாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x