Published : 19 Nov 2021 03:07 AM
Last Updated : 19 Nov 2021 03:07 AM
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியதையடுத்து, அங்குதலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர். ஆனால்பெரும்பாலான நாடுகள் தலிபான்களின் அரசை அங்கீகரிக்கவில்லை. இதனிடையே, அங்கு அவ்வப்போது தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. இதனால் ஆப்கானிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் ஆப்கன் விவகாரம் குறித்தஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்தியதூதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:
கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு இந்தியா முக்கியப் பங்காற்றி உள்ளது. இப்போதும்கூட ஆப்கனைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் இந்தியாவில் தொடர்ந்து கல்வி கற்க எங்கள் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
ஆப்கனில் கடந்த சில மாதங்களாக நடந்த உள்நாட்டுப் போர்காரணமாக அங்கு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் முடங்கிஉள்ளன. மேலும் அங்கு இப்போது நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக அங்கு வசிக்கும் மக்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உணவுப்பொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், ஆப்கன் மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை தடையின்றி வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. உணவுதானியங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் அந்நாட்டுக்கு வழங்க இந்தியா தயாராக உள்ளது.
அதேநேரம் மதம், இனம், அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் மனிதாபிமான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடுகளை மறந்து அண்டை நாடுகளும் பிற உலக நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் ஆப்கன் மக்களுக்கு உடனடியாக கிடைக்க உலக நாடுகளுடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT