Published : 17 Sep 2021 02:42 PM
Last Updated : 17 Sep 2021 02:42 PM

க்ரீன் டீ ஏன் கசக்கிறது?- காரணம் கண்டறிந்த பெண் விஞ்ஞானிக்கு டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள்

க்ரீன் டீ ஏன் கசக்கிறது என்பதை தனது ஆராய்ச்சிகள் மூலம் உலகுக்குச் சொன்ன ஜப்பானைச் சேர்ந்த பெண் விஞ்ஞானிக்கு டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள் தேடுபொறி நிறுவனம்.

முக்கிய தினங்களின்போது கூகுள் தனது தேடுபொறி பக்கத்தில் வித்தியாசமான டூடுல்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று செப்டம்பர் 17 ஆம் தேதி ஜப்பானிய பெண் விஞ்ஞானி மிச்சியோ சூஜிமுராவை கவுரவப்படுத்தும் விதமாக அவரது 133வது பிறந்தநாளான இன்று கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

யார் இந்த சூஜிமுரா?

மிச்சியோ சூஜிமுரா ஜப்பானின் ஒக்கிகாவா நகரில் கடந்த 1888ல் பிறந்தார். இவர் வேளான் விஞ்ஞானியாகவும் உயிர்வேதியியலாளராகவும் இருந்தார். சிறு வயதிலிருந்தே கல்வி சிறந்து விளங்கிய அவர், ஜப்பானின் புகழ்பெற்ற ஹொக்கைடோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சியாளரானார். அதுவே அவரது நீண்ட கால கனவாக இருந்தது. அங்கே அவர், ஜப்பானிய பட்டுப்புழுக்களின் ஊட்டச்சத்துக் கூறுகளை ஆராய்ந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்பட்டார். அங்குதான் அவர் க்ரீன் டீயின் உயிரிவேதியியல் கூறுகள் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கினார். அப்போது அவருடன் டாக்டர் உமேதாரோ சுசுகியும் ஆராய்ச்சியில் இணைந்தார். சுசுகி, வைட்டமின் பி1 ஐ கண்டுபிடித்த பெருமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் கூட்டு ஆராய்ச்சியின் பலனாக, க்ரீன் டீயில் வைட்டமின் சி இருப்பதைக் கண்டறியப்பட்டது. பின்னர் சூஜிமுரா தனியாக மேற்கொண்ட ஆராய்ச்சியில், 1929ல் க்ரீன் டீயில் உள்ள கேட்சின் (catechin) என்ற வேதிப் பொருள் தான் அதைக் குடிக்கும் போது ஏற்படும் கசப்பு சுவைக்கான காரணம் என்பதை உலகுக்குக் கண்டறிந்து சொன்னார்.

அடுத்த ஆண்டே டேனின் (tannin) என்ற இன்னொரு வேதிக்கூறையும் க்ரீன் டீயில் இருந்து பிரித்தெடுத்தார். இவைதான் அவருடைய முனைவர் பட்டத்துக்கான அடிப்படை ஆராய்ச்சியாக இருந்தது.

க்ரீன் டீயின் வேதிப்பொருட்கள் "On the Chemical Components of Green Tea" என்று தனது ஆய்வுக் கட்டுரைக்கு தலைப்பு கொடுத்தார். க்ரீன் டீ பற்றிய ஆராய்ச்சிகளுக்காக 1932ல் ஜப்பானில் வேளாண் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

பின்னாளில் சூஜிமுரா ஒரு கல்வியாளராக மிளிர்ந்தார். டோக்கியோவில் உள்ள பெண்கள் ஹையர் நார்மல் ஸ்கூல் என்றழைக்கப்படும் பெருமைமிகு கல்வி நிலையத்தில் முதன் தலைவராகவும் தேர்வானார்.

வேளாண் துறையில் அவரது பங்களிப்புக்காக இன்றும் அவர் பிறந்த ஒகிகாவா நகரில் அவரைக் கவுரவப்படுத்தும் நினைவு ஸ்தூபி இருக்கிறது.

இந்தச் சூழலில் அவரது பிறந்தநாளான இன்று கூகுள் நிறுவனம் டூடுல் மூலம் அவரைக் கவுரவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x