Published : 02 Sep 2021 03:18 PM
Last Updated : 02 Sep 2021 03:18 PM

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பள்ளிக் குழந்தைகள் 70 பேர் கடத்தல்

நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பள்ளிக் குழந்தைகள் 70க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜம்ஃபாரா பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து ஜம்ஃபாரா பகுதி காவல்துறை செய்தித்தொடர்பாளர் முகமது ஷேஹூ கூறும்போது, காயா எனும் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பெருமளவிலான ஆயுதம் தாங்கிய கொள்ளைக் கும்பல் நுழைந்தது. இந்தக் கும்பல் 73 குழந்தைகளைக் கடத்திச் சென்றது. காவல்துறை ராணுவத்துடன் கைகோர்த்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார்.

1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தல்:

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி நைஜீரியாவில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். குழந்தைகளை கடத்திச் செல்லும் கொள்ளைக் கும்பல் பெற்றோரிடம் பெருந் தொகையை பிணைத் தொகையாகப் பெற்றுக் கொண்டு குழந்தைகளை விடுவிக்கிறது. சில குழந்தைகள் கொள்ளையர்கள் பிடியில் இறந்துவிடுகின்றனர். சில குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். நைஜீரியாவில் குழந்தைக் கடத்தல் தொடர்கதையாகி வரும் நிலையில் அதன் பின்னணி என்னவென்று அறிவோம். நைஜீரியா முழுவதுமே விரவிக் கிடக்கின்றனர் பேண்டிட்டுகள் எங்களை அழைத்துக் கொள்ளும் கொள்ளையர்கள். இவர்கள் குழந்தைகளைக் கடத்தி பிணைத் தொகையாகப் பெறும் பணத்தின் மூலம் பிழைக்கின்றனர். இவர்களுக்கு போகோ ஹராம் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு.

யார் இந்த போகோ ஹராம் தீவிரவாதிகள்?

போகோ ஹராம் தீவிரவாதிகள் நாட்டில் இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி நடக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இவர்களுக்கு ஒற்றைத் தலைமை என்று ஏதுமில்லை. இருந்தாலும், அல் கொய்தா போன்ற பாங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருப்பதால் காரியம் சாதித்துக் கொள்கின்றனர்.

2002-ல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட போகோ ஹராம் இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாகத் தீவிரவாதச் செயலில் ஈடுபடும் இயக்கம்.

போகோ ஹராம் தீவிரவாதிகள் இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளனர். இதனால் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இயக்கத்துக்கு கடத்தப்படும் குழந்தைகளை கொள்ளைக் கும்பல் விற்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது.

நைஜீரியாவின் கடத்தல்காரர்கள் சாதாரண மக்களைக் கடத்துவதற்குப் பதிலாக குழந்தைகளைக் கடத்துவதால் பெரியளவில் பணமும் பிரபல்யமும் கிடைப்பதால் இவ்வாறு செய்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

மேலும், மாநில அரசுகளும் கடத்தல்காரர்கள் குழந்தைகளை விடுவிக்க கார், ரொக்கப் பரிசு போன்ற பிணைத் தொகையை கொடுக்கின்றன. இவ்வாறு செய்வது மறைமுகமாக அவர்களை ஊக்குவிக்கவே செய்யும் இதனை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் முஹம்மது புஹாரி வலியுறுத்தி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x