Last Updated : 04 Feb, 2016 02:40 PM

 

Published : 04 Feb 2016 02:40 PM
Last Updated : 04 Feb 2016 02:40 PM

இஸ்லாம் மதத்தை அமெரிக்கா ஒடுக்கவில்லை: மசூதியில் ஒபாமா பேச்சு

அமெரிக்க தேர்தல் களத்தில் இஸ்லாத்துக்கு எதிரான புது ஆவேச பேச்சுக்கள் எழுந்துள்ளதை மன்னிக்க முடியாதது என்று வர்ணித்த அதிபர் ஒபாமா, பயங்கரவாதத்தை ஒழிப்பதன் மீதான நடவடிக்கையை நாம் உலகிற்கு நிரூப்பிக்க வேண்டுமெனில் இஸ்லாமை ஒடுக்காமல் அது செய்யப்படுகிறது என்பதை காட்டுவதிலேயே உள்ளது என்றார்.

மேரிலாந்து, பால்டிமோரில் உள்ள மசூதிக்குச் சென்ற ஒபாமா அங்கிருந்த முஸ்லிம் சமுதாயத்தினரிடையே உரை நிகழ்த்திய போது இவ்வாறு கூறினார். அமெரிக்காவில் உள்ள மசூதிக்கு முதல் முறையாக சென்ற ஒபாமா, சமீபத்திய டோனல்டு டிரம்ப் முதற்கொண்டு பிரச்சாரித்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சுக்கு கண்டனம் வெளியிட்டதோடு, எந்தவொரு மதநம்பிக்கைக்கு எதிரான தப்பான பரப்புரைகளை அமெரிக்க மக்கள் மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றார்.

"எந்த ஒரு மதநம்பிக்கையின் மீதும் தாக்குதல் தொடுப்பது அனைத்து நம்பிக்கை மீதுமே தொடுக்கும் தாக்குதலாகும். நம்மிடையே மதச்சுதந்திரம் உள்ளது என்ற உண்மையை நாம் மதிக்க வேண்டும்.

இன்று அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களிடையே ஒருவிதமான பீதி ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். எந்த ஒரு குழு தாக்கப்பட்டாலும் அமெரிக்கர்கள் அதற்கு எதிராக எழுச்சி பெற வேண்டும்.

அனைத்து அமெரிக்கர்கள் போலவே நீங்களும் (முஸ்லிம்களும்) பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்கள் குறித்து கவலையடைந்துள்ளீர்கள். இதற்கும் மேலாக சிலர் செய்யும் வன்முறைச் செயல்களுக்கு முஸ்லிம்-அமெரிக்கர்களை குற்றம்சாட்டி இலக்காக்குவது தவறு என்பதையும் நான் அறிகிறேன்.

9/11 தாக்குதல் முதல், பாரீஸ் தாக்குதல் மற்றும் சான் பெர்னார்டினோ தாக்குதல் வரை பயங்கரவாதத்தின் கொடுஞ்செயல்களை இஸ்லாம் மத நம்பிக்கைகளுடன் இணைத்துப் பேசுவதும் வாடிக்கையாகி வருகிறது.

மேலும், சமீப காலங்களில் அமெரிக்க-முஸ்லிம் மக்களுக்கு எதிரான மன்னிக்க முடியாத அரசியல் சொல்லாடல்கள் புழங்கி வருகின்றன. நாம் நாட்டில் இதற்கு ஒரு போதும் இடமில்லை. எனவே, முஸ்லிம் அமெரிக்கர்கள் எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் அதிகமாகி வருவதிலும் ஆச்சரியமொன்றுமில்லை.

அமெரிக்க முஸ்லிம் மக்களுடன் உறவாடுவது என்பது கண்காணிப்புக்கான திரையாக இருக்கக் கூடாது. எனவே உங்களுக்கு ஆதரவாக உங்கள் சக அமெரிக்கர்கள் எப்போதும் உறுதுணையாக உள்ளனர் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் முஸ்லிம் அல்லது அமெரிக்கர் அல்ல, நீங்கள் முஸ்லிமாகவும் அமெரிக்கராகவும் இருக்கிறீர்கள்" என்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x