Published : 21 Aug 2021 08:30 AM
Last Updated : 21 Aug 2021 08:30 AM

வரலாற்றிலேயே மிகக் கடினமான மீட்புப் பணி: காபூல் விமானநிலைய குழப்பம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து

தலிபான் பிடியில் சிக்கிய ஆப்கனில் இருந்து அமெரிக்கர்களை மீட்பதுதான் இதுவரை நாடு சந்தித்ததிலேயே மிகக்கடினமான மீட்புப் பணி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான் கட்டுப்பாட்டில் வந்தது. அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி வெளிநாடு தப்பிச் சென்றார். இதனால், அங்கு பெரும் பதற்றம் உருவானது.

அடுத்தநாளான திங்கள்கிழமை ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமானநிலையம் போர்க்களம் போல் காட்சியளித்தது. அலைகடலென திரண்ட மக்கள் ஏதாவது ஒரு விமானத்தில் ஏறி எங்கேயாவது சென்றுவிட மாட்டோமா என்று பதற்றத்துடன் அலைமோதினர்.

அமெரிக்க ராணுவ விமானங்கள் தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகள், ஊழியர்கள், படை வீரர்கள் அவர்களின் குடும்பத்தார் இன்னும் பிற அமெரிக்கர்களை வெளியேற்ற கடுமையாக போராடிக் கொண்டிருந்தது. விமானநிலையம் மட்டும் முழுக்கமுழுக்க அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்கர்களை மீட்பது குறித்து அதிபர் ஜோ பைடன் தொலைக்காட்சிப் பேட்டி அளித்துள்ளார்.

அப்பேட்டியில் அவர், "அமெரிக்க வரலாற்றில் இதுபோன்றதொரு கடினமான மீட்புப் பணியை எதிர்கொண்டதில்லை. ஆனால், ஒரு விஷயத்தைத் தெளிவாக உறுதிப்படுத்துகிறேன். ஆப்கனில் வசிக்கும் ஒரே ஒரு அமெரிக்கரைக்கூட விட்டுவைக்காமல் மீட்போம்.

ஆப்கன் தலிபான் பிடியில் சிக்கி முழுமயாக ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அங்கிருந்து 13,000 பேரை நமது ராணுவ விமானங்கள் மீட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்களுடன் கத்தார் நாட்டில் உள்ள விமானத்தளத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அமெரிக்காவைப் போல் பல்வேறு நாடுகளில் மீட்பு விமானமும் கத்தார் தளத்துக்கு வருவதால், அங்கு தற்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சில மணி நேரங்களுக்கு அமெரிக்க மீட்பு விமானங்கள் இயங்கவில்லை.

20 ஆண்டுகளாக ஆப்கனில் தலிபான்களுக்கு எதிராக நாம் போர் தொடுத்துள்ளோம். இத்தனை காலத்தில் ஆப்கனில் எத்தனை அமெரிக்கர்கள் குடியேறியுள்ளனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும், ஆப்கனில் இருந்து அமெரிக்கா திரும்ப விரும்பும் எந்த ஒரு குடிமகனும் கைவிடப்படமாட்டார். அதேபோல், இந்த காலகட்டத்தில அமெரிக்காவுக்கு உதவியாக இருந்ததால் தற்போது தலிபான்களின் கோபப் பார்வையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களும் நிச்சயம் மீட்கப்படுவர்.

அமெரிக்கப் படைகளால் பயிற்சி கொடுத்து வளர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்குள் ஏற்பட்ட பிளவும், சரிவுமே தலிபான்கள் இவ்வளவு சீக்கிரம் காபூலைக் கைப்பற்ற வழிவகுத்தது என்று எழும் குற்றச்சாட்டுகளை ஏற்பதற்கு இல்லை" என்று கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்கா தன்னை 20 ஆண்டு கால ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அதிபர் என்றே மக்கள் எதிர்காலத்தில் தன்னை நினைவுகூர்வார்கள் என்றும் அதிபர் பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x