Published : 13 Aug 2021 02:31 PM
Last Updated : 13 Aug 2021 02:31 PM

ஆப்கன் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு; திருமண நிர்பந்தம்: அடுத்தக்கட்டத்தை எட்டும் தலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியம்

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து வரும் தலிபான் தீவிரவாதிகள் தற்போது தங்களின் அட்டூழியத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

ஆப்கன் பெண்களை தங்கள் வசமாக்கும் முயற்சியில் தீவிரவாதிகள் இறங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு வெளிப்படையாகவே அச்சுறுத்தலை ஏற்படுத்தி, உங்களின் இளம் மகள்களை எங்கள் படை வீரர்களுக்கு மனைவியாக்குங்கள் என்று மிரட்டுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சொல்வது ஒன்று.. செய்வது வேறு:

தலிபான் தீவிரவாதிகள் வெற்றியை பிரகடனம் செய்யும்போது, பொதுமக்களோ, அரசு அதிகாரிகளோ, ராணுவத்தினரோ எங்களின் வெற்றி குறித்து அச்சம் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஆனால், அங்கு நடப்பது வேறாக உள்ளது. தலிபான் தீவிரவாதிகளிடம் சரணடையும் ராணுவ வீரர்களை, காவல்துறையினரை ஈவு இரக்கமின்றி கொலை செய்கின்றனர். இது போர்க்குற்றமாகும் எனக் கூறுகிறது அமெரிக்கா.

அது மட்டுமல்லாது தற்போது பெண்களைக் கட்டாயப்படுத்தி தங்கள் தீவிரவாதக் கும்பலுக்கு இரையாக்க முயல்கின்றனர்.

12 நகரங்களைக் கைப்பற்றிய தலிபான்கள்:

ஆப்கானிஸ்தானின் மற்றொரு மாகாண தலைநகரான காந்தகார் நகரையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்கள் ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியாமல் ஆப்கான் அரசு திணறிவருகிறது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 12 மாகாணங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளன. அந்நாட்டிலேயே 2-வது மிகப்பெரிய நகரம் காந்தகார். அந்த நகரையே தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

"வெறும் 30 நாட்களில் காபூலை தலிபான் தீவிரவாதிகள் தனிமைப்படுத்தி விடுவார்கள். அதிகபட்சம் 90 நாட்களில் ஒட்டுமொத்த காபூலையும் அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள்" என அமெரிக்கா எச்சரிந்தது குறிப்பிடத்தக்கது.

சமரச முயற்சி பலிக்குமா?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாகாணம் என்று முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் தலிபான்கள்.

இந்நிலையில், கத்தார் நாட்டில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான சர்வதேச ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரிட்டன், உஸ்பெகிஸ்தான், கத்தார் நாட்டுப் பிரதிநிதிகளும், ஐ.நா சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று, ஆப்கானிஸ்தான் சார்பில் மத்தியஸ்தம் பேசும் கத்தாரின் வாயிலாக, தலிபான்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் பங்கு அளிக்கிறோம் ஆனால், வன்முறையைக் கைவிடுங்கள் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கெல்லாம் செவிசாய்க்க தலிபான்கள் தயார்நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. போர் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x