Last Updated : 21 Feb, 2016 11:13 AM

 

Published : 21 Feb 2016 11:13 AM
Last Updated : 21 Feb 2016 11:13 AM

இந்திய லிகோ ஆய்வு மையம் 2023-ல் செயல்படும்

இந்திய லிகோ ஆய்வு மையம் வரும் 2023-ம் ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும் என்று அமெரிக்க லிகோ ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி பெரட் ராப் தெரிவித்துள்ளார்.

ஒலி, ஒளி, ரேடியோ அலைகள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். அண்மையில் ஈர்ப்பு அலைகளை (gravitational waves) அமெரிக்காவைச் சேர்ந்த லிகோ ஆய்வு மையம் கண்டுபிடித்தது.

விண்வெளியில் சூரியனை போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்கள் உள்ளன. அவை தங்கள் வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக (black-hole) மாறுகின்றன. அவை ஒன்றையொன்று சுற்றி பிணையும் போது ஈர்ப்பலைகள் வெளியா கின்றன.

சுமார் 130 கோடி ஒளி ஆண்டு களுக்கு முன்பு சூரியனை போன்று 29 மற்றும் 36 மடங்கு பெரிய ராட்சத கருந்துளைகள் ஒன்றை ஒன்று சுற்றி பிணைந்தன. அந்த பிணைவால் ஏற்பட்ட ஈர்ப்ப லைகள் அண்மையில் பூமியை வந்தடைந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஹன்போர்டு, லூசியாணா மகாணத்தில் உள்ள லிவிங்ஸ்டன் ஆகிய இடங்களில் ஈர்ப்பலைகளை கண்டறியும் லிகோ (The Laser Interferometer Gravitational-Wave Observatory) ஆய்வு மையங்கள் செயல்படு கின்றன. இந்த ஆய்வு மையங்கள் ஆங்கில எழுத்தான ‘எல்’ (L) வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ஆய்வுமையத்தின் எல் வடிவ குழாய் சுமார் 4 கி.மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற அதிநவீன ஆய்வு மையம் இந்தியாவில் ரூ.1000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு அண்மையில் அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து அமெரிக்காவின் ஹன்போர்டு லிகோ ஆய்வுமைய மூத்த விஞ்ஞானி பிரெட் ராப் கூறிய தாவது: லிகோவின் மூன்றாவது ஆய்வு மையம் இந்தியாவில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையம் 2023-ம் ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும்.

காந்திநகரில் உள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் (IPR), புணேவில் உள்ள சர்வதேச விண்வெளி, விண்இயற்பியல் ஆய்வு மையம் (IUCAA), இந்தூரில் உள்ள ராஜா ரமணா அதிநவீன தொழில்நுட்ப மையம் (RRCAT) ஆகியவற்றுடன் இணைந்து இந்திய லிகோ மையத்தை அமைக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இத்தாலியின் பிசா நகரில் ஐரோப்பிய ஈர்ப்பலைகள் ஆய்வு மையம் செயல்படுகிறது. இதே போல ஜெர்மனியின் ஹனோவர் பகுதியில் ஜிஇஓ600 என்ற பெயரிலும் ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் கே.ஏ.ஜி.ஆர்.ஏ. என்ற பெயரிலும் ஈர்ப்பலை ஆய்வு மையங்கள் செயல்படுகின்றன.

இவற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த லிகோ ஈர்ப்பலை ஆய்வு மையமே முதல்முறையாக ஈர்ப்பலைகளைக் கண்டறிந்தது. இந்த மையத்துக்காக உலகம் முழுவதும் 1000 விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து பணியாற்றினர். இதில் 60 பேர் இந்தியர்கள்.

இப்போது இந்தியாவில் 3-வது லிகோ ஆய்வு மையம் அமைய இருப்பது இந்திய விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லாக அமையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x