Published : 22 Jun 2014 01:15 PM
Last Updated : 22 Jun 2014 01:15 PM

உக்ரைன் அரசு போர்நிறுத்த அறிவிப்பு

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஒரு வார கால போர்நிறுத்த அறிவிப்பை உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோ ஷென்கோ அறிவித்துள்ளார். ஆனால், அதை கிளர்ச்சியாளர்கள் நிராகரித்து விட்டனர்.

உக்ரைனின் கிழக்குப் பகுதி யில் ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் தாங்கிய ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 375 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுடன் கடைசியாக நடைபெற்ற மோதலில் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டு பாதுகாப்புப் படை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்நாட்டின் புதிய அதிபர் போரோஷென்கோ தானாக முன்வந்து போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “ஒரு வார காலத்துக்கு போர் நிறுத்தம் செய்கிறோம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கிளர்ச்சி யாளர்கள் அனைவரும் தங்களின் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ள போதிலும், ராணுவ வீரர்களின் மீது தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி தர தயங்க மாட்டோம்” என்றார்.

இதற்கிடையே உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்லோவ்யனோகிர்ஸ்க் நகருக்குச் சென்ற பெட்ரோ போரோஷென்கோ, அங்குள்ள பொதுமக்களை சந்தித்து உரையா டினார்.

ஒபாமா ஆலோசனை

போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் பிரான்ஷுவா ஹொலாந்த், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் வரவேற்றுள்ளனர். உக்ரைன் நிலவரம் குறித்தும், இராக்கில் ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாத அமைப்பு நடத்தி வரும் தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும் ஏஞ்சலா, ஹொலாந்த் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒபாமா பேசினார்.

உக்ரைன் எல்லை அருகே நிறுத்தியுள்ள தனது ராணுவத்தின் மூலம் பிரிவினை கோரி போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு தேவை யான உதவிகளை ரஷ்யா செய்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று அமெரிக்கா எச்சரித் துள்ளது. எல்லைப் பகுதியில் இருந்து ராணுவத்தை ரஷ்யா வாபஸ் பெற வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் நிராகரிப்பு

கிளர்ச்சியாளர்களின் தலை வர்களில் ஒருவரான வலேரி போலோடோவ் கூறும்போது, “எங்கள் மண்ணில் இருந்து உக்ரைன் படைகள் வெளியேறும் வரை, ஆயுதங்களை கீழே போட மாட்டோம்” என்றார்.

புதின் உத்தரவு

உக்ரைன் எல்லைப் பகுதியில் ராணுவப் படையினரின் எண்ணிக் கையை ரஷ்யா அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், போரிட தயாராக இருக்குமாறு நாட்டின் மத்திய பகுதியில் அமைந் துள்ள படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட் டுள்ளார் என்றும், அதைத் தொடர்ந்து அப்படைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x