Published : 02 Feb 2016 10:35 AM
Last Updated : 02 Feb 2016 10:35 AM

உலக மசாலா: மரம் மனிதன்!

வங்கதேசத்தில் வசிக்கும் 25 வயது அபுல் பஸாடர் ‘மரம் மனிதன்’ என்று அழைக்கப்படுகிறார். அவரது இரண்டு கைகளிலும் கால்களிலும் மரங்களின் வேர்ப்பகுதியைப் போல கரடு முரடான மருக்கள் காணப்படுகின்றன. 10 வயதில் அபுல் ‘ஹ்யூமன் பாப்பில்லோமா வைரஸ்’ தாக்கத்துக்கு உள்ளானார். இந்த வைரஸ் தோலையும் ஈரமான ஜவ்வையும் பாதிக்கிறது. அதனால் அவரது கைகளிலும் கால்களிலும் மருக்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. ரிக்‌ஷா ஓட்டியாக இருந்தவருக்குத் தற்போது எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. சாப்பிடுவது முதல் அனைத்து வேலைகளுக்கும் அடுத்தவரின் உதவி தேவைப்படுகிறது. ஹ்யூமன் பாப்பில்லோமா வைரஸ்களில் 100 வகைகள் உள்ளன. 30 வகை மரபணுக்களைப் பாதிக்கக்கூடியவை. எல்லா பாப்பில்லோமா வைரஸ்களும் மருக்களை உண்டாக்கக்கூடியவை.

என்ன கொடுமை இது?

லண்டனில் சட்டம் படித்து வருகிறார் 20 வயது சைமா அஹ்மது. 195 ரூபாய் கொடுத்து கிட்காட் சாக்லெட் பாக்கெட்டுகளை வாங்கினார். ஆனால் ஒரு பாக்கெட்டிலும் வேஃபர் இல்லை. வெறும் சாக்லெட் பார் மட்டுமே இருந்தது. ஏமாற்றமடைந்த சைமா, நெஸ்லே நிறுவனத்துக்குக் கடிதம் எழுதிவிட்டார். ’’நான் நெஸ்லே மீது நம்பிக்கை வைத்து சாக்லெட் வாங்கினேன். என் நம்பிக்கையை வீணாக்கிவிட்டது நெஸ்லே. உலகப் புகழ்பெற்ற ஒரு நிறுவனம் இவ்வளவு அலட்சியமாக வாடிக்கையாளர்களைக் கையாளக் கூடாது. இந்தத் தவறுக்காக நெஸ்லே நிறுவனம் என் வாழ்நாள் முழுவதும் எனக்கு சாக்லெட்களை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் வாழ்நாள் முழுவதும் அவர்களின் சாக்லெட்களுக்கு தரம் நிர்ணயிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வேன். என் கடிதத்துக்கு மன்னிப்புக் கேட்டு, என் கோரிக்கையை ஏற்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’’ என்கிறார் சைமா.

ம்… கலக்குங்க சைமா!

பிரிட்டனைச் சேர்ந்த மரச்சாமான்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, மரங்களை வளைத்து, மேஜைகளையும் நாற்காலிகளையும் உருவாக்கி வருகிறது. கவின் முன்ரோ என்ற டிசைனர் அழகான மரங்களை எல்லாம், நாற்காலிகளாகவும் மேஜைகளாகவும் இயற்கையிலேயே மாற்றி வருகிறார். இதற்காக மரங்களையோ, கிளைகளையோ அவர் வெட்டுவதில்லை. நாற்காலி, மேஜைகளுக்கு ஏற்றவாறு அச்சுகளை வைத்து, வளைத்து வளரவிடுகிறார். ஒரு நாற்காலி, மேஜை அளவுக்கு வளர்ந்த பிறகு அதை அப்படியே வெட்டி எடுக்கிறார். அதற்குப் பிறகு வெட்டுவதோ, மரத்தை இழைப்பதோ கிடையாது. இயற்கையாக நாற்காலியும் மேஜையும் விளைந்தது போலக் காட்சியளிக்கின்றன. ’’எல்லோரும் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இப்படிச் செய்யும்போது 10 நாற்காலிகள்தான் செய்ய முடிகிறது என்றால், அந்தப் பத்தும் தனித்துவம் மிக்கதாக இருக்கின்றன என்பது முக்கியமான விஷயம்’’ என்கிறார் முன்ரோ. இதற்காக 2.5 ஏக்கரில் 400 மரங்களை வளர்த்து வருகிறார். பிளாஸ்டிக் அச்சுகளைப் பயன்படுத்தி, விதவிதமான மரச்சாமான்களை உருவாக்கி வருகிறார். ஒரு மரத்தை வளர்த்து, நாற்காலிகளாக, மேஜைகளாக மாற்றுவதற்கு 4 முதல் 8 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. ஆண்டுக்கு 50 பொருட்களை மட்டுமே விளைவித்து, விற்று வருகிறார் முன்ரோ. ஒரு நாற்காலியின் விலை 2.5 லட்சம் ரூபாய்!

நாற்காலி, மரத்தில் காய்த்தாலும் விலை ரொம்பவே அதிகம்…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x