Published : 16 Feb 2016 10:46 AM
Last Updated : 16 Feb 2016 10:46 AM

உலக மசாலா: செல்லப் பிராணியான ராட்சத பல்லி, பாம்பு

கலிபோர்னியாவில் வசிக்கிறார் எரிக் லெப்ளான்க். அவரது வீட்டில் ஊர்வனப் பிராணிகளை ஏராளமாக வளர்த்து வருகிறார். ராட்சத பல்லியில் இருந்து பாம்புகள் வரை இங்கே இருக்கின்றன. எரிக் மட்டுமின்றி, அவரது சின்னஞ்சிறு குழந்தைகளும் பிராணிகள் மீது அன்பு செலுத்துகிறார்கள். விளையாடுகிறார்கள். ’’என்னுடைய மகளை டிராகன் ஒன்று கடித்துவிட்டது. ஆனாலும் எனக்கோ, என் மகளுக்கோ டிராகன் மீது வருத்தம் இல்லை. இரண்டு வயது மகனின் நெற்றியில் பைதான் கடித்துவிட்டது. விஷம் இல்லாததால் பெரிய பிரச்சினை வரவில்லை.

என்னுடைய குழந்தைகள் மூவருக்கும் விலங்குகளை எப்படிக் கையாள்வது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அதனால் 19 அடி மலைப்பாம்பாக இருந்தாலும் கவலை ஒன்றும் இல்லை. பாம்புகள் குழந்தைகளின் உடலைச் சுற்றி, கழுத்தைச் சுற்றி விளையாடுகின்றன. நாம் விலங்குகளை மதித்தால், அவையும் நம்மை மதிக்கின்றன. அன்பாக இருக்கின்றன. அதற்காக எங்கள் கண்காணிப்பு இல்லாதபோது குழந்தைகளை பாம்புகளுடன் விளையாட நான் அனுமதிப்பதில்லை. உயிரினங்கள் மீது அன்பாக இருக்கலாம்; முட்டாள்தனமாக இருக்கக்கூடாது’’ என்கிறார் எரிக்.

நீங்க சொல்வதெல்லாம் புரிந்தாலும் திகிலாகத்தான் இருக்கிறது எரிக்…



பிரிட்டனில் வசிக்கிறார் 66 வயது இலோனா ரிச்சர்ட்ஸ். மிகக் குறைந்த பட்ஜெட்டில் வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஓய்வூதியத்தில் தனியாக வாழ்ந்து வரும் இலோனா, ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து, மிகச் சிக்கனமான வழிகளைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார். ’’இரவு நேரத்தில் கடைகளுக்குச் சென்றால் காலாவதியாகும் பழங்களும் காய்களும் குறைந்தவிலையில் கிடைக்கும்.

அவற்றை வாங்கி வந்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்வேன். சூப்பர் மார்க்கெட்களில் தள்ளுபடி கிடைக்கும் பொருட்களை வாங்கிக்கொள்வேன். அசைவ உணவுகளை விட சைவ உணவுகள் விலை குறைவு என்பதால் சைவத்துக்கு மாறிவிட்டேன். காலாவதியான பொருட்கள் என்றால் கெட்டுப்போன பொருட்கள் அல்ல. அவை அந்தத் தேதியில் இருந்து தரம் குறைய ஆரம்பிக்கும் பொருட்கள். அதனால் பரிசோதித்து, தரமானதாக இருந்தால்தான் வாங்குவேன். தொலைக்காட்சி பார்ப்பதில்லை. கம்ப்யூட்டர் மூலம் அனைத்தும் அறிந்துகொள்கிறேன். இரவில் ஒரு விளக்குதான் பயன்படுத்துவேன். விலை குறைவான ஆடைகளை விற்கும் அறக்கட்டளைகளில் துணிகளை வாங்கிக்கொள்வேன்.

என்னுடைய சிக்கனமான நடவடிக்கைகளை வலைப்பக்கத்தில் எழுதி வருகிறேன். இந்தச் சிக்கனமான வாழ்க்கையைக் கடந்த 8 வருடங்களாகப் பின்பற்றி வருகிறேன். எல்லோரும் பொருளாதாரப் பாதுகாப்பு இன்மையால் நான் இப்படிச் செய்வதாக நினைக்கிறார்கள். நான் தெளிவான மனத்துடன் தான் இந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். மனிதர்களுக்கு விருப்பத்துக்கும் தேவைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. புது போன் வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பழைய போன் வேலை செய்யும்போது புது போன் வாங்குவது அநாவசியம் என்பதை உணர்வதில்லை’’ என்கிறார் இலோனா.

விருப்பமும் தேவையும் ஒன்றல்ல என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லிருக்கீங்க இலோனா!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x