Published : 10 Dec 2015 09:54 AM
Last Updated : 10 Dec 2015 09:54 AM

உலக மசாலா: நம்பிக்கை மனிதர்!

அரிஸோனாவில் வசிக்கும் 27 வயது ப்ரையன் டாகலோக்கு பிறக்கும்போதே 2 கைகளும் இல்லை. துன்பமான வாழ்க்கை அமைந்தாலும் சாதாரண மனிதர்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ப்ரையன். கைகளுக்குப் பதிலாக கால்களைப் பயன்படுத்திக்கொள்கிறார். கால்களால் கார் ஓட்டுகிறார். டாட்டூ வரைகிறார். உலகிலேயே கைகள் இல்லாமல், டாட்டூவுக்குச் சான்றிதழ் வாங்கியிருக்கும் ஒரே டாட்டூ கலைஞர் இவர்தான். “எல்லோரும் எனக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் சந்தேகத்துடன் வருவார்கள், டாட்டூவைப் பார்த்து திருப்தியாகச் செல்வார்கள். எல்லோரும் கால்கள் மூலம் வேலைகளைச் செய்வதைப் பார்த்து ஆச்சரியமடைகிறார்கள்.

எனக்குப் பிறக்கும்போதே கைகள் இல்லை. கால்களைக் கொண்டு, கைகளால் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் என்னால் செய்ய முடிகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. கால்களால் டாட்டூ வரைவதை அனுமதிக்கும் என் வாடிக்கை யாளர்கள்தான் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள். நம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் போதும். எது இல்லை என்றாலும் உலகில் வாழ்ந்துவிட முடியும்” என்கிறார் ப்ரையன்.

நம்பிக்கை மனிதர்!

கனடாவில் வசிக்கும் 30 வயது சியான் கூப்பருக்கு அதிக வருமானம் தரக்கூடிய வேலை கூட இல்லை. 2012ம் ஆண்டு 2 கோடியே 83 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கினார். தன்னுடைய சிக்கன நடவடிக்கைகளால் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனை குறைந்த காலத்தில் அடைத்து விட்டார். தான் வழக்கமாகப் பார்த்து வந்த வேலையுடன் கூடுதலாக 2 வேலைகளையும் செய்து வருகிறார். மீதி இருக்கும் நேரங்களில் பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளை எழுதி, அதன் மூலம் கொஞ்சம் வருமானம் ஈட்டுகிறார். அசைவம் விலை அதிகம் என்பதால், சைவ உணவுக்கு மாறிவிட்டார்.

காரையும் பைக்கையும் பயன்படுத்தாமல், பொது வாகனங்களைப் பயன்படுத்தியதால் ஆண்டுக்கு 6.5 லட்சம் ரூபாய் சேமிக்க முடிந்தது. வீட்டின் அடித்தளத்தில் தங்கிக்கொண்டார். மேல் தளத்தை வாடகைக்கு விட்டதில் கணிசமான வருமானம் வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ஒருமுறை கூட அவர் விடுதியில் சாப்பிடவில்லை. திரைப்படத்துக்குச் செல்லவில்லை. பிக்னிக் கூட போகவில்லை. ’’வீட்டுக் கடன் இன்னும் 30 ஆண்டுகளுக்கு என் தலை மீது கத்தி போலத் தொங்கிக்கொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இந்தக் கடனில் இருந்து வெளிவர வேண்டும்.

இன்னும் 3 ஆண்டுகளில் மொத்த கடனிலிருந்து வெளிவந்துவிடுவேன். அதற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்க்கையை வாழவேண்டியதுதான். என்னைப் பார்த்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இன்னும் பல ஆண்டுகளுக்கு கடனை அடைத்துக்கொண்டிருப்பார்கள். நான் மகிழ்ச்சியாக இல்லை என்று நினைக்கிறார்கள். யாருக்கு எதில் மகிழ்ச்சி என்பதை யாரால் தீர்மானிக்க முடியும்?’’ என்கிறார் கூப்பர்.

அட, நல்ல யோசனையாக இருக்கே!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x