Published : 06 May 2021 01:51 PM
Last Updated : 06 May 2021 01:51 PM

கரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிக்கிறோம்: அமெரிக்கா அறிவிப்பு

கரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பல நாடுகளில் தீவிரம் அடைந்துள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இதற்கான போராட்டங்களும் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன.

கரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமை கூடாது என்று இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தின. ஆனால், இவ்விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் மவுனம் காத்து வந்தன. மருந்து நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்ரீன் வெளியிட்ட அறிக்கையில், “உலகளாவிய சுகாதார நெருக்கடி, மற்றும் கரோனா தொற்றுநோயின் அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள அழைப்பு விடுக்கின்றோம். அறிவுசார் காப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். ஆனால், இந்தத் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சேவையில், கரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமைகளை நீக்குவதை நாங்கள் ஆதரிக்கிறோம்.

எங்களது நிர்வாகத்தின் நோக்கம் பயனளிக்கக்கூடிய, பாதுகாப்பான தடுப்பூசிகள் அதிக எண்ணிக்கையில் மக்களிடம் விரைந்து கிடைக்க வேண்டும் என்பதுதான். தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை எங்களது நிர்வாகம் எடுத்து வருகிறது. தடுப்பூசிகள் தயாரிப்பதற்கான மூலக்கூறு பொருட்கள் உற்பத்தியையும் அதிகரிக்க திட்டமிட்டுளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x